திருச்சி பதிவுத்துறை டிஐஜியாக இருப்பவர் ராமசாமி. இவர்மீது பல்வேறு முறைகேடு புகார்கள் எழுந்ததால் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. இந்தநிலையில், அவர் மீது ஏராளமான புகார்கள் எழுந்ததால், அவரை சஸ்பெண்ட் செய்து, பதிவுத்துறை ஐஜி தினேஷ் ஆலிவர் பொன்ராஜ் உத்தரவிட்டார்.
இது குறித்து பதிவுத்துறை அதிகாரிகளிடம் விசாரித்தபோது பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது, திருச்சி பதிவுத்துறையில் துணைமண்டலப்பதிவுத்துறைத்தலைவராக ராமசாமி உள்ளார். அவர் மதுரையில் பலகோடி மதிப்புள்ள சொத்தினை போலியாக போட்டோவை ஒட்டி ஆள்மாறட்டம் செய்ய ராமசாமியே துணைநின்றதை மதுரை உயர்நீதிமன்றமே கண்டுபிடித்து வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டது. நீதிமன்றம் உத்தரவிட்டதால் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர், சத்தியமங்கலம் காட்டுப் பகுதியில் தலைமறைவாகிவிட்டார். பின்னர் முன் ஜாமீன் கிடைத்த பிறகுதான் வெளியில் வந்தார்.
இவர், 1965ல் சார்பதிவாளராக பணியில் சேர்ந்தவர் சேர்ந்த நாள் முதலே தனது செல்வாக்கால் அரசாங்க விதிகளை தகர்த்து எறிந்து பதிவுத்துறையில் பணியாற்றி வந்தார். ஒருவர் ஒரு அலுவலகத்தில் சார்பதிவாளராக மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியக்கூடாது என்கிற விதிகள் உள்ளது. ஆனால் அந்த விதிகளை தகர்த்து கோவில்பட்டி சார்பதிவு அலுவலகத்தில் தொடர்ந்து ஆறு ஆண்டுகள் பணிபுரிந்து அதிகாரதுஷ்பிரயோகம் செய்தார். மேலும், தேசிய நெடுஞ்சாலையில் பல நூறுகோடி மதிப்புள்ள நிலங்களை உறவினர் பெயரில் அன்றே வாங்கிக்குவித்ததாக புகார் எழுந்தது.
இவர் சார்பதிவாளர் நிலையில் இருந்து மாவட்டப்பதிவாளராக பதவி உயர்வு பெற்ற பின்னர் உதவிப்பதிவுத்துறைத்தலைவர் ஆகிற வரை பத்திரம் மட்டுமே பதியும் பணியை செய்தவர். ஒருவர் மாவட்டப்பதிவாளர் பதவிக்கு வந்தால் எந்த ஒரு மாவட்டப்பதிவாளரும் நிர்வாகப்பணி பின்னர் தணிக்கை பணி பின்னர் பதிவுப்பணி என மூன்று நிலையில் மட்டுமே அடுத்தடுத்து பணியமர்த்த அரசாணை உள்ளது. ஆனால், ராமசாமி, சார்பதிவாளர காலம் முதல் உதவிப்பதிவுத்துறைத்தலைவர் காலம் வரை கிட்டத்தட்ட 47 ஆண்டுகளாக அரசாணைகளை தகர்த்து, விதிகளை உடைத்து தொடர்ந்து பத்திரங்களை பதிவு செய்து காசு, துட்டு, மணி என பதிவுப்பணிகளை மட்டுமே தனது செல்வாக்கால் கோலோச்சி வந்தவர்.
போலீசார் திருப்பூர் போலீசார் முறையாக வழக்கை விசாரிக்காததால், அப்படியே கிடப்பில் போடப்பட்டது. மேலும் ஒரு புகார் எழுந்தால், பதவி உயர்வு பெறுவது கடினம். ஆனால் போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட பின்னரும், அவருக்கு உயர் அதிகாரிகள் டிஐஜியாக பதவி உயர்வு வழங்கினர். ஒரு இடத்தில் மூன்றாண்டுகளுக்குமேல் நிர்வாக பணியில் இருக்க முடியாது.
ஆனால் இவரின் பணிக்கால விபரத்தை ஆய்வு செய்தாலே இவர் பணியில் சேர்ந்த நாள் முதல் தனது செல்வாக்கால் பணிமாறுதல் விதிகளை வாழ்நாள் முழுவதும் தகர்த்து பணிபுரிந்து வந்தவர் என்பது வெட்ட வெளிச்சமாகிவிடும். இவர் பதிவுப்பணியில் பணிபுரிந்த காலங்களில் பல போலி ஆவணங்களை பதிவு செய்து காவல்துறைக்கே தண்ணிகாட்டினாலும் உயர்நீதிமன்றத்தின் பார்வையில் இருந்து தப்பமுடியாமல் சிக்கிக்கொண்டார். இப்போது அந்த வழக்கில்தான் ராமசாமி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.