திருச்சி மாவட்டம். மணப்பாறையை அடுத்த டி .ஆண்டியபட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில், ஆசிரியராக வேலை செய்பவர் குமார். சுமார் 50-க்கும் மேற்பட்ட மாவை – மாணவிகள் படிக்கும் இப்பள்ளியில் சமீபத்தில் தான் குமார் வேலைக்கு சேர்ந்துள்ளார். சேர்ந்த நாளிலிருந்தே, தினசரி மதுபோதையில் வந்து போதை தலைக்கேறியதும் பள்ளி வகுப்பறையிலேயே தூங்கி விடுவதாக கூறப்படுகிறது. மாணவர்களின் தகவலின் பேரில், நேற்று வகுப்பறையில் தூங்கிக்கொண்டிருந்த ஆசிரியர் குமார் குறித்து மருங்காபுரி வட்டார கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு பெற்றோர்கள் புகார் அனுப்பியுள்ளனர். ஆசிரியர் தூங்குவதை புகைப்படம் எடுத்து முகநூல், வாட்ஸ் அப்பிலும் பதிவிட்டனர். இந்த புகைப்படம் வைரலானதை தொடர்ந்து விசாரணை நடத்த திருச்சி மாவட்ட கல்வி அதிகாரி ரவி உத்தரவிட்டார்.
இதனையடுத்து பள்ளிக்கு வந்த வட்டார கல்வி அதிகாரிகள் விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட ஆசிரியரை விசாரணைக்காக அலுவலகத்திற்கு வருமாறு அழைத்துள்ளனர். வட்டார கல்வி அதிகாரிகளின் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.