திருச்சி எஸ்பியாக இருப்பவர் டாக்டர் வருண்குமார் ஐபிஎஸ். இவரது மனைவி வந்திதா பாண்டே ஐபிஎஸ் புதுக்கோட்டை எஸ்பியாக பணியாற்றி வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகனை வழக்கு ஒன்றில் திருச்சி எஸ்பியின் தனிப்படை போலீசார் கைது செய்தனர். இதன் தொடர்ச்சியாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் சாட்டை துரை முருகன் ஆகியோர் எம்பி தேர்தலில் பணம் வசூல் செய்வது பற்றியும், நிர்வாகி காளியம்மாள் பற்றி பேசியது தொடர்பான ஆடியோக்கள் வெளியாகின. இதனைத் தொடர்ந்து நாம் தமிழர் நிர்வாகிகள் திருச்சி எஸ்பி வருண்குமாரை சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனம் செய்தனர். மேலும் திருச்சி எஸ்பியின் மனைவியான புதுக்கோட்டை எஸ்பி வந்திதா பாண்டேவையும் விமர்சனம் செய்ததோடு மார்பிங் செய்த படங்களையும் வெளியிட்டு பெரும் மனஉளைச்சலை ஏற்படுத்தினர். நாம் தமிழர் நிர்வாகிகள் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில் புதுக்கோட்டை எஸ்பி வந்திதா பாண்டே சிவகங்கை ஏஎஸ்பியாக பணியாற்றிய போது போக்சா வழக்கு ஒன்றில் விரைவான விசாரணை மற்றும் நடவடிக்கையின் அடிப்படையில் குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. இந்த சிறப்பான நடவடிக்கைக்கு மத்திய உள்துறை அமைச்சகத்தின் விருது வந்திதா பாண்டேவுக்கு தற்போது வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் விருது பெற்றுள்ள தனது மனைவி வந்திதா பாண்டேக்கு வாழ்த்து தெரிவித்து திருச்சி எஸ்பி வருண்குமார் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ” திரள்நிதி திருடர் கூட்டமும், அவர்களின் சாதிவெறி இணையதள கூலிப்படையும் உனது புகைப்படத்தை மார்பிங் செய்து மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் நீயோ செயல் வீராங்கனை, பெண் குழந்தைகளுக்கு எதிரான POCSO குற்றத்தின் துரித நடவடிக்கையும் எடுத்து HOME MINISTER INVESTIGATION வென்று சிங்கப்பெண் என்பதனை நிருப்பித்துவிட்டாய்.. வாழ்த்துக்கள் சிங்கப்பெண்ணே ” என்று குறிப்பிட்டுள்ளார்..
