அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வாஷிங்டன் டி.சி.யில் வீடு இல்லாமல் சாலையோரம் வசிக்கும் மக்களை உடனடியாக வெளியேற்றுவதாகவும், தலைநகரை “பாதுகாப்பானதாகவும் அழகானதாகவும்” மாற்றுவதற்கு இந்த நடவடிக்கை அவசியம் எனவும் அறிவித்தார். இந்த அறிவிப்பு, அவரது சமூக ஊடக தளமான ட்ரூத் சோஷியலில் வெளியிடப்பட்டது.
அவர் தனது பதிவில் வீடு இல்லாதவர்களை தலைநகருக்கு “வெகு தொலைவில்” மாற்றி வைப்பதாகவும், குற்றவாளிகளை சிறையில் அடைப்பதாகவும் தெரிவித்தார். இந்த அறிவிப்பு, வாஷிங்டனில் குற்றவாளிகளை ஒடுக்குவதற்கும், நகரத்தை அழகுபடுத்துவதற்கும் அவர் திட்டமிட்டுள்ள பரந்த திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பதிவில், “நாளை வெள்ளை மாளிகையில் செய்தியாளர் மாநாடு நடத்த உள்ளேன். நமது தலைநகரை முன்பு இருந்ததை விட பாதுகாப்பாகவும், அழகாகவும் மாற்றப் போகிறேன். வீடு இல்லாதவர்கள் உடனடியாக வெளியேற வேண்டும். உங்களுக்கு தங்க இடங்கள் வழங்கப்படும், ஆனால் தலைநகருக்கு வெகு தொலைவில். குற்றவாளிகளே, நீங்கள் வெளியேற வேண்டியதில்லை. நீங்கள் சிறையில் அடைக்கப்படுவீர்கள், அங்குதான் உங்களுக்கு இடம்” என்று எழுதினார். மேலும், “எல்லாம் மிக விரைவாக நடக்கும், எல்லைப் பிரச்சினையைப் போலவே. கடந்த சில மாதங்களில் எல்லையில் மில்லியன் கணக்கானோர் நுழைவதை பூஜ்ஜியமாக்கினோம். இது அதைவிட எளிதாக இருக்கும். தயாராக இருங்கள் என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த அறிவிப்பு, வாஷிங்டன் மேயர் முரியல் பவுசர், நகரத்தில் குற்றங்கள் அதிகரிக்கவில்லை என்று கூறிய நிலையில் வந்துள்ளது. பவுசர், MSNBC-யின் ‘தி வீக்எண்ட்’ நிகழ்ச்சியில், “2023இல் குற்றங்கள் உயர்ந்தது உண்மைதான், ஆனால் இது 2023 இல்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாக வன்முறைக் குற்றங்களை 30 ஆண்டு குறைந்த அளவுக்கு குறைத்துள்ளோம்” என்று தெரிவித்தார்.
வாஷிங்டனில் தற்போது சுமார் 3,782 பேர் வீடு இல்லாமல் இருப்பதாக ‘கம்யூனிட்டி பார்ட்னர்ஷிப்’ அமைப்பு தெரிவிக்கிறது. இவர்களில் பெரும்பாலோர் அவசரகால தங்குமிடங்கள் அல்லது தற்காலிக வீடுகளில் உள்ளனர், ஆனால் சுமார் 800 பேர் தெருக்களில் வசிக்கின்றனர். டிரம்ப், மார்ச் 2025இல் ஒரு நிர்வாக உத்தரவு மூலம், தேசிய பூங்கா சேவையை வாஷிங்டனில் உள்ள மத்திய அரசு நிலங்களில் வீடு இல்லாதவர்களின் முகாம்களையும், கிறுக்கல்களையும் அகற்ற உத்தரவிட்டிருந்தார்.
மேலும், ஜூலை 2025இல் மற்றொரு நிர்வாக உத்தரவு மூலம், தெருக்களில் முகாமிடுவோரை மறுவாழ்வு மையங்களுக்கு அனுப்பவும், போதைப்பொருள் பயன்பாடு மற்றும் திருட்டு போன்ற குற்றங்களை தடுக்கவும் மத்திய நிதியை மாநிலங்களுக்கு மறுபகிர்வு செய்ய உத்தரவிட்டார். அதனைத்தொடர்ந்து இப்போதும் அது போன்று உத்தரவை பிறப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.