நாமக்கல்லில், த.வெ.க. தலைவர் விஜய், செப்டம்பர் 27 ம் தேதி பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது, தனியார் மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தியதாக, மாவட்ட செயலாளர் சதீஷ்குமார் மீது நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் காவல் துறையினர் தன்னை கைது செய்யக் கூடும் என்பதால் முன் ஜாமீன் கேட்டு சதீஷ்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு, நீதிபதி என்.செந்தில்குமார் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, காவல் துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சந்தோஷ், “அனைத்து விதிகளையும் பூர்த்தி செய்வதாக கூறி அனுமதி பெற்றுள்ளார் தவெக மாவட்ட செயலாளர் சதீஷ்குமார் . ஆனால் அவரது கட்சியினரின் செயல்பாடுகளால் 5 லட்சம் ரூபாய் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. இது தவிர பொது சொத்துக்கள் சேதப்படுத்தியதாக மேலும் எட்டு வழக்குகள் அவருக்கு எதிராக பதியப்பட்டுள்ளது,” என்று கூறினார். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, கட்சியினர் அடாவடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள நிலையில், எதுவும் தெரியாது என மனுதாரர் எப்படி கூறலாம்? கட்சியினரை கட்டுப்படுத்த தெரியாதா? பொறுப்புடன் செயல்பட வேண்டாமா என சரமாரியாக கேள்வி எழுப்பி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.