தஞ்சாவூர்: அடிக்க ஆரம்பித்து விட்டார்கள் என்று உடைந்து விடாதே என்று ஆரம்பிக்கும் வாசகங்களுடன் கூடிய தவெக நிர்வாகிகள் ஒட்டியுள்ள போஸ்டர் அரசியல் களத்தை பரபரப்பாக்கி உள்ளது.
தங்கள் கட்சி தலைவர் விஜய்க்கு ஊக்கமளிக்கும் வகையில் தவெக நிர்வாகிகள் தஞ்சை நகர் முழுவதும் ஒட்டியுள்ள இந்த போஸ்டர்கள் தான் தற்போது மக்கள் மத்தியில் பேசும் பொருளாகி உள்ளது. கடந்த சனிக்கிழமை கரூரில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கலந்து கொண்ட பிரச்சார கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தின் போது நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை எழுப்பி உள்ளது. இதனால் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மீது பலரும் கண்டன விமர்சனங்களை எழுப்பி உள்ளனர். இருப்பினும் ஆதரவு குரல்களும் ஓங்கி ஒலித்து வருகிறது. பாதுகாப்பு குறைபாடுகளால்தான் இதுபோன்ற சம்பவம் நடந்தது. திருச்சி, அரியலூர், நாகை மற்றும் திருவாரூரில் இதுபோலவே மக்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது. ஆனால் அங்கெல்லாம் ஏற்படாத இதுபோன்ற சம்பவம் கரூரில் மட்டும் நடந்தது எப்படி? இதன் பின்னணியில் சதி உள்ளது என்று பொதுமக்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சிபிஐ விசாரணை கோரி நீதிமன்றத்திலும் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்யை கைது செய்ய வேண்டும் என்று பலரும் கூறி வந்தனர். கரூர் சம்பவம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதியை கொண்ட ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தை கைது செய்ய போலீசார் தீவிரமாக உள்ளனர். இப்படி அரசியல் களத்தில் தமிழக வெற்றிக் கழகம் மீது கருப்பு புள்ளி வைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் இதுகுறித்து தனது மனவேதனையை தெரிவித்து விஜய் வீடியோவும் வெளியிட்டார். இதுகுறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில் விஜய்க்கு ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு கருத்துக்கள் கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் அடிக்க ஆரம்பித்து விட்டார்கள் என்று உடைந்து விடாதே. போர்க்களத்தில் இறங்கி விட்டோம் வெற்றி வாகை சூடுவதற்கு , உண்மை ஒருநாள் வெல்லும் என தமிழக வெற்றி கழகத்தின் தஞ்சை மத்திய மாவட்ட தொழிலாளர் அணியை சேர்ந்த நிர்வாகிகள் சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் மாரி ஆகியோர் தஞ்சை நகர் முழுவதும் போஸ்டர் ஒட்டி உள்ளனர். இந்த போஸ்டர்தான் தற்போது டாக் ஆப் த சிட்டியாக மாறியுள்ளது.