திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியைச் சேர்ந்த முருகேசன் (59) என்பவர் நேற்று தனது இருசக்கர வாகனத்தில் திருச்சி – சென்னை நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்குப் பின்னால் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கோபிநாத் (20) என்ற வாலிபர் அதிவேகமாகத் தனது பைக்கை ஓட்டி வந்துள்ளார். எதிர்பாராதவிதமாக கோபிநாத்தின் பைக் முருகேசனின் வாகனத்தின் மீது மோதியது.
இதில் இருவரும் நிலைதடுமாறி சாலையில் விழுந்தனர். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று, கீழே விழுந்த கோபிநாத்தின் தலை மீது ஏறிச் சென்றது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். பலத்த காயமடைந்த முருகேசன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

