திருச்சி டி.வி.எஸ் டோல்கேட் உலகநாதபுரத்தில் முத்து மாரியம்மன் கோவில் செல்வ விநாயகர் கோவில் உள்ளது .இந்த கோவில் 73 -ம் ஆண்டு தேர்த் திருவிழா கடந்த 7-ந் தேதி முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. மாலை 7 மணிக்கு முத்து மாரியம்மன் செல்வ விநாயகர் கோவிலில் இருந்து குதிரை வாகனத்தில் புறப்பட்டு வாண வேடிக்கை, தாரை தப்பட்டையுடன் முளைப்பாரியுடன் வீதி உலா வந்து, அம்மனுக்கு பூச்சொரிதல் நடைபெற்றது.
இரவு 8 மணிக்கு அம்மனுக்கு காப்பு கட்டுதல் நடைபெற்றது. தொடர்ந்து காவடி, பால்குடம் அக்னி சட்டி எடுக்கும் பக்தர்களுக்கு காப்பு கட்டுதல் நடைபெற்றது. இன்று (வெள்ளிக்கிழமை )இரவு 8.30 மணிக்கு கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவிலில் இருந்து உற்சவ அம்மன் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் எழுந்தருளி, கல்லுக்குழி என்.எம்.கே காலனி வழியாக மேள வாத்தியத்துடன், பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள், வாண வேடிக்கையுடன் முளைப்பாரி எடுத்து, வீதி உலா வந்து உலகநாதபுரம் முத்துமாரியம்மன் கோவில் சன்னதியை வந்தடையும்.
நாளை ( 10 – ந் தேதி) காலை 7 மணிக்கு காவிரி ஆறு, அய்யாளம்மன் படித்துறை மேல சிந்தாமணியில் இருந்து அலகு காவடி ,பால் காவடிகள் மற்றும் அக்னி சட்டிகள் எடுத்து உலகநாதபுரம் வீதிவலம் வந்து அம்மன் சன்னதியை அடைந்து, பால் அபிஷேகம் நடைபெறுகிறது. 11 மணிக்கு அன்னதானம் நிகழ்ச்சியும், 12 மணிக்கு அம்மனுக்கு கஞ்சி வார்த்தல் நிகழ்ச்சியும் நடக்கிறது.
மாலை 4 மணிக்கு அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் நடக்கிறது. 11- ந் தேதி காலை 8.30 மணிக்கு சங்கிலி ஆண்டவர் கோவிலில் சுத்த பூஜை நடைபெறும். 12 மணிக்கு கோவிலில் சுமார் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மதியம் 3 மணிக்கு மாவிளக்கு பூஜையும், மாலை 6 மணிக்கு மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இத்துடன் விழா நிறைவு பெறுகிறது. 12-ந் தேதி மாலை 7 மணிக்கு முத்து மாரியம்மன் கோவிலில் இன்னிசை கலை நிகழ்ச்சி நடைபெறுகிறது.விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் விழா கமிட்டியினர் செய்துள்ளனர்.
