அரசுத்துறைகளின் சேவைகளை மக்களின் இல்லங்களுக்கே சென்று வழங்கிடும் வகையிலும், பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்களுக்கு உடனடி தீர்வு காணும் வகையிலுமான ‘உங்களுடன் ஸ்டாலின்” எனும் திட்டத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் .மு.க.ஸ்டாலின் கடந்த
(15.07.2025) அன்று தொடங்கி வைத்து, மாநிலம் முழுவதும் முகாம்கள் நடைபெற்று வருகிறது.
திருச்சி மாவட்டத்தில் ஜுலை 15-ந் தேதி முதல் நவம்பர் 14 ந் தேதி வரை மாநகராட்சி பகுதிகளில் 32 இடங்களிலும், முசிறி, துறையூர், லால்குடி, துவாக்குடி மற்றும் மணப்பாறை ஆகிய 5 நகராட்சி பகுதிகளில் 48 இடங்களிலும், 14 பேரூராட்சிப் பகுதிகளில் 28 இடங்களிலும், 14 ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் 243 முகாம்கள் என மொத்தம் 351 முகாம்கள் நடைபெறும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு மாவட்டம் முழுவதும் முகாம்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
திருச்சி மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் இன்று (29.07.2025) பொதுமக்கள் தங்களுடைய கோரிக்கை மனுக்களை அளித்து தீர்வு காணும் வகையில் திருச்சி கோ.அபிஷேகபுரம் வார்டு எண்.5 பகுதியில் வசிப்போர் பயன்பெறும் வகையில் உறையூர் வெக்காளியம்மன் கோவில் காவேரி மகாலிலும், துவாக்குடி நகராட்சிக்குட்பட்ட M.D சாலை பகுதியில் வசிக்கும் மக்கள் பயன்பெறும் வகையில் துவாக்குடி சமுதாய கூடத்திலும், லால்குடி நகர்ப்புற பஞ்சாயத்து பகுதிகளில் வசிக்கும் மக்கள் பயன்பெறும் வகையில் அப்பாதுரை கிராமம் அமிர்தம் மஹாலிலும்,
துறையூர் வட்டாரத்தில் வசிக்கும் மக்கள் பயன்பெறும் வகையில் அம்மாபட்டி சுதர்ஸனா பாலிடெக்னிக் கல்லூரியிலும், தாத்தையங்கார்பேட்டை வட்டாரத்தில் வசிக்கும் மக்கள் பயன்பெறும் வகையில் தாத்தையங்கார்பேட்டை வாளசிராமணி உயர்நிலைப்பள்ளியிலும், உப்பிலியபுரம் வட்டாரத்தில் வசிக்கும் மக்கள் பயன்பெறும் வகையில் உப்பிலியபுரம் விக்னேஷ் திருமண மகாலிலும் என மொத்தம் 6 இடங்களில் முகாம்கள் நடைபெற்று வருகிறது.
இம்முகாம்களின் வாயிலாக நகர்புறத்திற்கு 13 துறைகள் மூலமாக 43 சேவைகளும், ஊரகத்திற்கு 15 துறைகள் மூலமாக 46 சேவைகளும் வழங்கப்படும் வகையில் இம்முகாம்கள் நடைபெற்று வருகிறது.
திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோவில் தெரு காவிரி மஹாலில் நடைபெற்று வரும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை அமைச்சர் கே. என். நேருவும், , துவாக்குடியில் நடைபெறும் முகாமை அமைச்சர் அன்பில் மகேசும், பார்வையிட்டனர். பொதுமக்களிடமிருந்து பெறப்படும் கோரிக்கை மனுக்களை பதிவேற்றம் செய்வதையும் முகாமின் செயல்பாடுகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களுடன் கலந்துரையாடி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
லால்குடி நகர்ப்புற பஞ்சாயத்து பகுதிகளில் வசிக்கும் மக்கள் பயன்பெறும் வகையில் அப்பாதுரை கிராமம் அமிர்தம் மஹாலில் நடைபெற்று வரும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமின் செயல்பாடுகளை கலெக்டர் .வே.சரவணன், நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பணிகளை சிறப்பாக மேற்கொள்ள அலுவலர்களை அறிவுறுத்தினார்.
மேற்கண்ட முகாம்களில் திருச்சி மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் , மாநகராட்சி ஆணையர் .லி.மதுபாலன், மாவட்ட நகர் ஊரமைப்புக்குழு உறுப்பினர் க.வைரமணி, தனி மாவட்ட வருவாய் அலுவலர் (நெடுஞ்சாலைகள் நிலமெடுப்பு) ஆர்.பாலாஜி, நகரப் பொறியாளர் சிவபாதம், துவாக்குடி நகர்மன்ற தலைவர் காயம்பு, துவாக்குடி நகராட்சி ஆணையர் இ.பட்டுசாமி, திருவெறும்பூர் வட்டாட்சியர் ஜெயபிரகாஷ், மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.