கரூர் மாநகராட்சிவார்டு எண் 1 கோதுர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் சிறப்பு முகாம் இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், கரூர் சட்டமன்ற உறுப்பினர், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு நலத்திட்டங்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் கவிதா , துணை மேயர் தாரணி சரவணன், ஆணையர் சுதா , அரசுத்துறை அதிகாரிகள், திமுக நிர்வாகிகள் எனபலர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பல்வேறு அரசு துறையை சார்ந்தவர்கள் தனித்தனியாக முகாம் அமைத்திருந்தனர் அதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை மனுவாக வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை பத்திரிகையாளர்கள் சந்தித்தனர். அப்போது செந்தில் பாலாஜி கூறியதாவது: கரூர் மாவட்டததில் இதுவரை 29 முகாம்கள் நடந்துள்ளது. இதில் 16,742 மனுக்கள் வந்துள்ளது. இதில் 6577 மனுக்கள் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை கேட்டு தரப்பட்டு உள்ளது.
இங்கு கொடுக்கப்படும் மனுக்களில் சிலவற்றுக்கு உடனடியாக தீர்வு காணப்படுகிறது. சில மனுக்களுக்கு ஒரு வாரத்தில் தீர்வு அளிக்கப்படுகிறது. அதிகபட்சமாக 45 நாளில் மனுக்களுக்கு தீர்வு காணப்படும்.
கரூர் மாவட்டத்தை பொருத்தவரை உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்கள் சிறப்பாக நடந்து வருகிறது. மக்களிடம் நல்ல ஆதரவு கிடைத்து உள்ளது. எங்கள் பகுதியில் எப்போது முகாம் நடத்துவீர்கள் என மக்களே கேட்கும் அளவுக்கு மக்களிடம் வரவேற்பு பெற்றுள்ளது. இதனால் முதல்வர் மீது மக்கள் ஆதரவு பெருகி உள்ளது. இந்த முகாம் மூலம் பயன்பெற்ற மக்கள் முதல்வருக்கு நன்றி சொல்லி வருகிறார்கள்.
வாக்காளர் சேர்க்கும் ஓரணியில் தமிழ்நாடு திட்டத்தில் ஓடிபி கேட்பதற்கு கோர்ட் தடை விதித்துள்ளதே என்ற கேள்விக்கு,
இந்த திட்டத்தில் எந்தவித முறைகேடும் இல்லை. வாக்காளர் சேர்க்க வீடு வீடாகத்தான் போய் ஆக வேண்டும். ஒரு இடத்தில் மேடை போட்டு, எல்லோரையும் வரவழைத்து வாக்காளர் பட்டியலில் சேர்க்க முடியுமா?
இவ்வாறு அவர் கூறினார்.