பொய் வழக்குகள் மூலம் எதிர்க்கட்சிகளை ஒடுக்க முயன்ற ஒன்றிய அரசின் செயல் நீதிமன்றத்தில் சந்தி சிரித்தது என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் அவர் அறிக்கையில்;
“டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி காலத்தில் (2022) அறிமுகப்படுத்தப்பட்ட புதிய மதுபானக் கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு, மத்திய புலனாய்வு நிறுவனம் (CBI) மற்றும் அமலாக்கத் துறை (ED) ஆகிய ஒன்றிய அமைப்புகள் வழக்குகள் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டன.
இந்த வழக்கில் டெல்லியின் முன்னாள் முதலமைச்சர் அர்விந்த் கேஜ்ரிவால் மற்றும் முன்னாள் துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டனர். மணிஷ் சிசோடியா 530 நாட்களும், அர்விந்த் கேஜ்ரிவால் 156 நாட்களும் சிறையில் வைக்கப்பட்டனர்.
ஆனால், டெல்லி நீதிமன்றம் தற்போது இவ்வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லை என்று தெளிவாகக் குறிப்பிட்டு இருவரையும் விடுதலை செய்துள்ளது. மேலும், போலியாக வழக்கு புனைந்தமை தொடர்பாக விசாரணை அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளது என்பது மிகுந்த அதிர்ச்சியூட்டும் விடயமாகும்.
“அடிப்படை ஆதாரங்களே இல்லாமல், சதி நோக்கத்துடன் ஒரு முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்படுவது எவ்வாறு சாத்தியமானது?” என்ற நீதிமன்றத்தின் கேள்வி, ஜனநாயகத்தின் மீது நிகழ்ந்த அநீதி குறித்து நாட்டையே சிந்திக்க வைக்கிறது.
இந்த பொய் குற்றச்சாட்டுகள் அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தி, டெல்லி சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தோற்பதற்கான சூழலை உருவாக்கின. ஒன்றிய பாஜக அரசை விமர்சிக்கும் எதிர்க்கட்சித் தலைவர்களை மிரட்டவும், அரசியல் ரீதியாக பலவீனப்படுத்தவும் ஒன்றிய விசாரணை அமைப்புகள் பயன்படுத்தப்படுகின்றன என்ற குற்றச்சாட்டு இத்தீர்ப்பின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.
ஜனநாயக அமைப்புகள் அரசியல் பழிவாங்கலுக்கான கருவிகளாக மாற்றப்படுவது மிகவும் ஆபத்தான போக்கு. அரசியல் வேறுபாடு குற்றமாக கருதப்படும் சூழல் உருவாகக்கூடாது. நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு, அதிகார துஷ்பிரயோகத்திற்கு எதிரான வலுவான எச்சரிக்கை மணி.
ஒன்றிய அரசு எதிர்க்கட்சிகளை குறிவைத்து பொய் வழக்குகள் பதிவு செய்வதை உடனடியாக நிறுத்தி, ஜனநாயக மரபுகளையும் சட்டத்தின் மேலாதிக்கத்தையும் மதிக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்துகிறது” என தெரிவித்துள்ளார்.

