கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் ஒருவர், தீராத வயிற்று வலியால் மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம், வெங்கமேடு அருகே உள்ள புது குளத்துப்பாளையம் பகுதியைச் சேர்ந்த வினோத்குமார் (31) என்பவர் வெல்டிங் வேலை செய்து வந்துள்ளார் கடந்த இரண்டு வருடங்களாக வேலைக்கு செல்லாமல் மது போதைக்கு அடிமையாக இருந்ததாக கூறப்படும் இவருக்கு கடந்த சில நாட்களாக கடும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று காலை வயிற்று வலிக்காக மாத்திரை சாப்பிட்டவர் திடீரென காணவில்லை என்று அவரது அம்மா செல்லம்மாள் தேடிய பொழுது மருத்துவமனையின் ஏழாவது மாடியில் உள்ள படிக்கட்டில் இரும்பு பைப்பில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், வினோத்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

