Skip to content

வந்தவாசியில் பரபரப்பு: நண்பர்களை சந்திக்க மனைவி தடுத்ததால் விரக்தி – இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி சவேரியார்பாளையத்தைச் சேர்ந்த நகராட்சி துப்புரவுப் பணியாளர் சீனுவாசன் என்பவரது மகன் மோகன்ராஜ் (22). இவர் ராணிப்பேட்டையைச் சேர்ந்த ஒரு பெண்ணைக் காதலித்து வந்த நிலையில், கடந்த மாதம் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு, வந்தவாசி புதுத்தெருவில் உள்ள கார்வண்ணன் என்பவரது வீட்டில் மோகன்ராஜ் தனது மனைவியுடன் வாடகைக்கு வசித்து வந்தார்.சம்பவத்தன்று, மோகன்ராஜ் தனது நண்பர்களைப் பார்க்கச் செல்வதாகத் தனது மனைவியிடம் கூறியுள்ளார். ஆனால், அதற்கு அவரது மனைவி எதிர்ப்பு தெரிவித்து, அவரைக் கண்டித்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த மோகன்ராஜ், விரக்தியில் வீட்டின் அறைக்குள் சென்று கதவைப் பூட்டிக்கொண்டார். வெகுநேரமாகியும் அவர் வெளியே வராததால் சந்தேகமடைந்த குடும்பத்தினர், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது மோகன்ராஜ் அறையில் தூக்கில் பிணமாகத் தொங்குவதைக் கண்டு அவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

இது குறித்து மோகன்ராஜின் தந்தை சீனுவாசன் அளித்த புகாரின் பேரில், வந்தவாசி தெற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மோகன்ராஜின் உடலைக் கைப்பற்றிய போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருமணமான ஒரே மாதத்தில் இளைஞர் தற்கொலை செய்துகொண்ட இந்தச் சம்பவம் குறித்து வந்தவாசி தெற்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் வந்தவாசி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!