Skip to content

ஈரான் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய அமெரிக்கா

அமெரிக்க போர்க்கப்பலை ஆக்ரோஷமாக நெருங்கிய ஈரானின் உளவு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவம் சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே ராணுவ மோதலைத் தவிர்ப்பதற்கான முக்கியத் தூதரகப் பேச்சுவார்த்தைகள் விரைவில் நடைபெற இருந்தன. இந்தச் சூழலில், ஹார்முஸ் ஜலசந்திப் பகுதியில் அமெரிக்கக் கொடியுடன் சென்ற ‘எம்வி ஸ்டெனா இம்பரேடிவ்’ என்ற எண்ணெய் கப்பலை, ஈரானியப் படகுகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் வழிமறிக்க முயன்ற சம்பவங்கள் பதற்றத்தை அதிகரித்தன.

ஏற்கனவே இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், கடல் பகுதியில் பாதுகாப்பை உறுதி செய்ய அமெரிக்கா தனது படைகளைத் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபடுத்தி வருகிறது. இந்நிலையில், அரபிக்கடலில் ஈரான் கடற்கரையிலிருந்து சுமார் 500 மைல் தொலைவில் சர்வதேச கடல் பகுதியில் அமெரிக்காவின் ‘யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன்’ விமானம் தாங்கி போர்க்கப்பல் நேற்று ரோந்து பணியில் இருந்தது. அப்போது ஈரானுக்குச் சொந்தமான ‘ஷாஹத்-139’ ரக உளவு விமானம், அமெரிக்க கப்பலை நோக்கி மிக ஆக்ரோஷமாக வந்தது.

இதுகுறித்து அமெரிக்க ராணுவத் தலைமையகம் (சென்ட்காம்) வெளியிட்ட தகவலில், ‘தெளிவற்ற நோக்கத்துடன் நெருங்கி வந்த அந்த ட்ரோன், எங்களது எச்சரிக்கையை மீறியதால் எப்-35சி ரக போர் விமானம் மூலம் தற்காப்புக்காகச் சுட்டு வீழ்த்தப்பட்டது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் அமெரிக்கத் தரப்பில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. அதேசமயம், ‘எங்கள் விமானம் கண்காணிப்புப் பணியை வெற்றிகரமாக முடித்தது’ என்று ஈரான் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!