Skip to content

உசார் ஐயா உசாரு”…தங்கம் விலையை கூறி பெண்களை எச்சரித்த போலீசார்

  • by Authour

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் இரண்டு தினங்களே உள்ள நிலையில் அரியலூர் நகரில் உள்ள கடைவீதிகளில், மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. புத்தாடைகள், இனிப்புகள், பட்டாசுகள், மளிகை சாமான்கள் என தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க கிராமப்புறங்களில் இருந்து பொதுமக்கள் அரியலூர் கடைவீதிக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஸ்வேஸ் பா. சாஸ்திரி தலைமையில் அரியலூர், ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், செந்துறை, திருமானூர் உள்ளிட்ட மாவட்ட முழுவதும் 800 காவலர்கள் தொடர் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் அரியலூர் நகர கடைவீதிக்கு வருகை தரும் பொதுமக்களிடம், சிறப்பு உதவி ஆய்வாளர் மாரிமுத்து ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விழிப்புணர்வை ஏற்படுத்தியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அரியலூர் அண்ணா சிலை அருகே உள்ள காவலர்கள் பாதுகாப்பு அறையில் இருந்து ஒலிபெருக்கி

மூலம், காவல்துறையின் கனிவான, அன்பான வேண்டுகோள் என பேச்சைத் தொடங்கிய சிறப்பு உதவி ஆய்வாளர் மாரிமுத்து, தங்கம் விலை கிராமிற்கு 12,000 ரூபாய் விற்குது, சவரன் ஒரு லட்சம் ரூபாய் விற்குது. எனவே தங்க நகைகள் அணிந்து கடைகளுக்கு வருகை தரும் பொதுமக்கள், நகைகளின் மேல் ஒரு ஊக்கு போட்டு பத்திரப் படுத்திக் கொள்ளுங்கள்.

செயின், மாட்டல், நெக்லஸ், ஆரம் ஆகியவற்றில் பேருந்து நிலையத்தில் விற்கும் ஒரு ரூபாய் ஊக்கு ஒன்றை வாங்கி பத்திரப்படுத்திக் கொள்ளுங்கள்.

உங்களுக்கு அருகிலேயே திருடர்கள் இருப்பார்கள். உங்களிடமிருந்து நகைகளை உங்களுக்கு தெரியாமலேயே திருடிச் சென்று விடுவர்கள். தீபாவளி நல்ல முறையில் கொண்டாட முடியாது போய்விடும். ஆகவே பொருட்களை வாங்கிக்கொண்டு பாதுகாப்பாகவும், பத்திரமாகவும் வீட்டிற்கு செல்ல அரியலூர் காவல்துறை சார்பில் கனிவுடன் கேட்டுக் கொள்கிறோம்.

திருட வருபவர்கள் எல்லாம் உள்ளூர்காரர்கள் அல்ல. வெளியூரிலிருந்து வருவார்கள். வந்து பொருட்களை திருடிவிட்டு, நம்மை இளிச்சவாயர்களாக நினைத்து சென்று விடுவர். பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

தங்கம் விலை தற்பொழுது உச்சத்தை தொட்டு கொண்டிருக்கும் வேளையில் பெண்களை கவரும் வகையில் தங்கத்தை தொட்டு பெண்களுக்கு எச்சரிக்கை விடுத்த உதவி ஆய்வாளரின் இந்த செயல் அனைவரிடமும் பாராட்டைப் பெற்றுள்ளது.

error: Content is protected !!