Skip to content

உத்தரகாண்ட் மேக வெடிப்பில் வெள்ளம்: 60 பேர் பலி?

இமயமலைத் தொடரில் அமைந்துள்ளது  உத்தரகாண்ட் மாநிலம். இந்த மாநிலம் உ.பி.யில் இருந்து  பிரித்து உருவாக்கப்பட்டது. அதிக மலைபிரதேசங்களை கொண்டது இம்மாநிலம்.  இங்கு பல புனித தலங்களும் உள்ளன.   இதனால் இங்கு எப்போதும் யாத்ரீகர்கள், சுற்றுலா பயணிகள் வருவார்கள். இதற்காகவே இங்க ஏராளமான விடுதிகளும் உள்ளது.

இங்கு  நேற்று கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதனால் தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில், உத்தரகாசி மாவட்டத்தில் ஏற்பட்ட மேகவெடிப்பில் ஹர்ஷில் பகுதியில் உள்ள கீர் கங்கா ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சேறும், சகதியுமாக பயங்கர வேகத்தில் பாய்ந்து வந்த காட்டாற்று வெள்ளம், நேற்று மதியம் 1.45 மணி அளவில் தாராலி கிராமத்தை நெருங்கியது. அப்போது, கரையை தாண்டி வெள்ளம் பாய்ந்து, சில நொடிகளில் தாராலி கிராமத்தையே ஒட்டுமொத்தமாக சூறையாடியது.

அங்குள்ள ஓட்டல்கள், தங்கும் விடுதிகள், வீடுகள், கார்கள், மரங்கள் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. மூன்று, நான்கு மாடி கட்டிடங்கள் சீட்டு கட்டு போல சரிந்தன. வெள்ள நீருடன் வந்த சேற்றில் பாதி கிராமமே  மூழ்கியது. கங்கையின் பிறப்பிடமான கங்கோத்ரிக்கு செல்லும் வழியில் தாராலி கிராமம் முக்கிய தங்குமிடமாக அமைந்துள்ளது. இதனால் இங்கு ஏராளமான ஓட்டல்கள், தங்கும் விடுதிகள் உள்ளன. இவற்றில் 40 முதல் 50 கட்டிடங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இதில், பலரும் உயிருடன் மண்ணில் புதைந்துள்ளனர். சுமார் 60 முதல் 70 பேர் வரையிலும் உயிருடன் மண்ணில் புதைந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.  இதுவரை 4 உடல்கள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளன.

மேக வெடிப்பை நேரில் பார்த்த தராலி கிராமவாசியான ஆஸ்தா பவார், இந்த  பேரிடர் குறித்து  கூறியதாவது:

“நான் இப்போது தராலியில் தான் இருக்கிறேன். சாலைக்கு சற்று அருகில் என் வீடு இருப்பதால், இங்கிருந்து பார்த்தால் கீழே எவ்வளவு சேதம் ஏற்பட்டுள்ளது என்பது நன்றாக தெரிகிறது.

“என் கண் முன்னே பல ஓட்டல்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுவதைக் கண்டேன். அனைத்துமே ஒரே நேரத்தில் அடித்துச் செல்லப்படவில்லை. முதலில் வந்த அலை மிகவும் வலுவாகவும் பயங்கரமாகவும் இருந்தது. அதன் பிறகும், 10–15 அல்லது 20 நிமிடங்களுக்கு ஒருமுறை குப்பை கூளங்கள் அடித்துக் கொண்டு அலையலையாய் வந்தன. ஓரிரு ஓட்டல்கள் வெள்ளத்தில்அடித்துச் செல்லப்பட்டன.

இவ்வளவு பெரிய மழை பெய்யும் என யாரும் சொல்லவில்லை, எதிர்பார்க்கவில்லை. எந்தவிதமான எச்சரிக்கையும் கொடுக்கப்படவில்லை. விடுமுறையும் விடப்படவில்லை. இன்று குழந்தைகளுக்கும் பள்ளி விடுமுறை இல்லை. இவ்வளவு பெரிய விபத்து நடக்கப் போகிறது என்று யாருக்கும் தெரியாது. இந்த சம்பவம் மதியம் நடந்தது. நாங்கள் வீட்டின் மேல்தளத்திற்கு சென்றுவிட்டோம், அங்கிருந்து எல்லாம் தெளிவாகத் தெரிந்தது. எதுவுமே மிச்சமில்லை” ‘

இவ்வாறு அவர் சோகத்துடன் கூறினார்.

 உத்தரகாண்டில் இன்றும்  ஆங்காங்கே  மழை பெய்து கொண்டு தான் இருக்கிறது.  இதனால்  நிவாரணப்பணிகளை முழு வீச்சில் செய்ய முடியாத நிலை உள்ளது.  இன்று 9 மாவட்டங்களில்  பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

error: Content is protected !!