திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர், முதன்மை செயலாளர் மதிமுக துரை வைகோ வைகோவின் நிறைவு விழாவிற்கு அழைப்பு விடுத்துள்ளார். அவர் கூறியதாவது…
அழைப்பு மடல் -தலைவரை உயிராய் நேசிக்கும் கழகத் தோழர்களே, வணக்கம்!
தமிழர் நலனுக்காக கால் கடுக்க, உடல் வலிக்க சமத்துவ நடைபயணம் மேற்கொண்டு வரும் தலைவர் வைகோ அவர்களை வரவேற்று, அவரது தியாகத்திற்கு நன்றி செலுத்திட மதுரையில் 12.01.2026 அன்று நடைபெற உள்ள நடைபயண நிறைவு விழாவில் பங்கேற்க வாரீர்! இயக்கத் தந்தை, தலைவர் வைகோ அவர்கள், தனது 82வது வயதிலும், எல்லோரும் உங்களால் முடியாது என்றபோதும், வேண்டாம் என்று தடுத்தும், தன் உடல் உபாதைகளை ஒரு பொருட்டாக கருதாமல்,
தமிழர்களின் நலனையும், தமிழ்நாட்டின் எதிர்காலமாம் இளைஞர்களின் வாழ்வையும் எண்ணி, ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணித்துளியும் கால் கடுக்க, உடல் வலிக்க திருச்சி முதல் மதுரை வரை 160 கி.மீ.க்கும் மேற்பட்ட தூரத்தை, 02.01.2026 முதல் 12.01.2026 வரை, பகல் வெயிலிலும், மாலை குளிரிலும் தொடர்ந்து 11 நாட்கள் மேற்கொண்டு வரும் சமத்துவ நடைபயணத்தை, எதிர்வரும் 12.01.2026 அன்று மதுரை மாநகரில் வெற்றிகரமாக நிறைவு செய்கிறார்.
தலைவருடன் தோளோடு தோள்நின்று இந்த நடைபயணத்தில் பங்கேற்ற அனைத்து வீரர்களுக்கும்,
தமது சமத்துவ நடைபயணத்தால் கழகத்திற்கு புத்துணர்ச்சி ஊட்டி புது ரத்தம் பாய்ச்சியுள்ள இயக்கத் தந்தைக்கும் நெஞ்சார்ந்த நன்றி பாராட்டிடும் மாபெரும் நிறைவு விழாவில், கழகத் தோழர்கள் அனைவரும் தவறாது கலந்துகொண்டு சிறப்பு சேர்க்க வேண்டுமாய் அன்புடன் அழைக்கிறேன்.
வழியெங்கும் வரவேற்பளிக்க வேண்டும் எனும் உன்னத நோக்கில், திருச்சி மாவட்டத் தோழர்கள் ஆங்காங்கே திரண்டு நின்று வரவேற்றதாலும், பிற மாவட்டத் தோழர்கள் நடைபயண வழியெங்கும் வரவேற்பு ஏற்பாடு செய்ததாலும் நடைபயண தொடக்க விழாவில் பங்கேற்க இயலாத நிலை ஏற்பட்டது போலல்லாமல், இம்முறை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநாடு போன்று மாபெரும் கூட்டமாக மதுரையில் நிறைவு விழாவை அமைத்து, “மதுரையே குலுங்கியது!” என்ற செய்தியை உலகறியச் செய்ய வேண்டுமாய், உங்களிடம் உரிமையும் அன்பும் கொண்டு கேட்டுக்கொள்கிறேன்.
அதுமட்டுமல்ல, தலைவருக்கும் நடைபயண வீரர்களுக்கும் அர்ப்பணிக்கும் நோக்கில் புதியதொரு முயற்சியை விழா மேடையில் அரங்கேற்ற திட்டமிட்டுள்ளேன். அதனையும் கண்டுகளிக்க தவறாது பங்கேற்க வாரீர் என்று அழைக்கிறேன். கழக நிர்வாகிகளே, தோழர்களே, தொண்டர்களே அணிதிரண்டு வாரீர்!
நடைபயணம் வென்றது என்று ஓங்கி முழங்கி உலகறியச் செய்யும் இவ்விழாவை மாபெரும் வெற்றியாக்கிடுவீர்! என்று இவ்வாறு தெரிவித்துள்ளார்.

