அருள்மிகு ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் நடைபெற்று வரும் வைகுந்த ஏகாதசி பெருவிழாவின் பகல் பத்து உற்சவத்தில், ஆறாம் திருநாள் நிகழ்ச்சி இன்று சிறப்பாக நடைபெற்றது. ஆறாம் திருநாளை முன்னிட்டு, அரங்கநாதர் அர்ஜூன மண்டபத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். இந்நிகழ்ச்சியில் திருமங்கையாழ்வார் அருளிசெய்த பெரிய திருமொழியின் தொடக்கப் பாசுரமான “நாராயணா என்னும் நாமம்” செவிமடுக்க, திருநாராயணன் ஆனந்தமாக சேவை சாத்திக்கொண்டார்.
இச்சேவையில், திருநாராயணன் முத்துக் கொண்டை சாற்றி, அதில் கலிங்கத்துராய் அணிந்து, சிகப்புக் கல் அபய ஹஸ்தம், மகர கர்ண பத்ரம் திருக்காதுகளில் அணிந்து, கண்டாபரணம் சாத்திக்கொண்டார். திருமார்பில் சிகப்புக் கல் சூர்ய பதக்கம், அதன் மேல் ஸ்ரீமகாலட்சுமி பதக்கம், சந்திர ஹாரம் ஆகியவை அலங்கரிக்கப்பட்டன.
மேலும், வரிசையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சிகப்புக் கல் அடுக்கு பதக்கங்கள் மிக நேர்த்தியாக அணியப்பட்டு, தங்கப் பூண் பவழ மாலை, இரண்டு வட முத்து மாலைகள் மற்றும் “திருப்பாவை மரகத பச்சை கிளி” பதக்கம் அணிந்து அருளினார்.
வஸ்திர அலங்காரமாக வெண் பட்டு அணிந்து, அதன் மேல் மஞ்சள் நிற பட்டுக் கபா எனும் வஸ்திரம் சாற்றப்பட்டது. பின்னர் சேவை அலங்காரமாக பங்குனி உத்திர பதக்கம் மற்றும் புஜ கீர்த்தி அணிந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இந்த சேவையை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, அரங்கநாதரின் திருவருளைப் பெற்றனர்.

