Skip to content

லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ. கைது

துணை முதல்வர் வழங்கிய இலவச வீட்டு மனை பட்டாவை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலரை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாகப் பிடித்துக் கைது செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் குமாரசேரி பகுதியைச் சேர்ந்த 12 பேருக்கு, சமீபத்தில் திருவேற்காட்டில் நடைபெற்ற அரசு விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இலவச வீட்டு மனை பட்டாக்களை வழங்கினார். இந்தப் பட்டாக்களை முறையாக அரசு இணையதளத்தில் (Online) பதிவேற்றம் செய்வதற்காக, பயனாளிகள் குமாரசேரி கிராம நிர்வாக அலுவலர் (VAO) ஆனந்தவேலை (35) அணுகினர். பட்டாவை ஆன்லைனில் ஏற்ற தலா 3,000 ரூபாய் லஞ்சம் தர வேண்டும் என்று ஆனந்தவேல் வற்புறுத்தியுள்ளார். இதன்பேரில் 11 பேர் பணத்தை வழங்கிய நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த சிவகுமார் (51) என்பவர் லஞ்சம் கொடுக்க விரும்பாமல் இது குறித்து திருவள்ளூர் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார்.

போலீசாரின் ஆலோசனையின்படி, சிவகுமார் நேற்று கிராம நிர்வாக அலுவலகத்திற்குச் சென்று ஆனந்தவேலிடம் 2,000 ரூபாயை வழங்கினார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி. ஜெயக்குமார் தலைமையிலான போலீசார், ஆனந்தவேலை கையும் களவுமாகப் பிடித்துக் கைது செய்தனர். தற்போது அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுத் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. அரசு வழங்கிய இலவச பட்டாவைப் பதிவேற்றம் செய்ய லஞ்சம் கேட்ட அதிகாரி கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!