ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்ததை தொடர்ந்து புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் வரும் செப்டம்பர் 9ம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் பாஜக வேட்பாளராக மகாராஷ்டிரா கவர்னரும், தமிழகத்தை சேர்ந்தவருமான சி.பி. ராதாகிருஷ்ணன் நிறுத்தப்பட்டு உள்ளார். இந்தியா கூட்டணி வேட்பாளராக ஆந்திரமாநிலத்தை சேர்ந்தவரும், முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியுமான சுதர்சன் ரெட்டி நிறுத்தப்பட்டு உள்ளார்.
பாஜக வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று டெல்லியில் உள்ள தேர்தல் அதிகாரியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக தலைவர் நட்டா , அதிமுக எம்.பி. தம்பிதுரை மற்றும் கூட்டணி கட்சியினர் பலர் உடனிருந்தனர்.
துணை ஜனாதிபதி தேர்தல் விதிப்படி குறைந்தபட்சம் நான்கு செட் வேட்புமனுக்கள் கட்டாயம் தாக்கல் செய்யப்பட வேண்டும். ஒவ்வொரு செட்டிலும் 20 பேர் முன்மொழிபவராகவும், 20 பேர் வழிமொழிபவராகவும் கையெழுத்திட வேண்டும். அதன்படி இன்று வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோர் முன்மொழிந்து கையெழுத்திட்டனர். தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள அனைத்து பிரதானக் கட்சிகளின் எம்பிக்கள் வழிமொழிந்து கையெழுத்திட்டுள்ளனர்.
நாளை வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள். எனவே இந்தியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி நாளை மதியம் வேட்புமனு தாக்கல் செய்கிறார். இதில் காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட்கள், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். போட்டி உறுதியாகி விட்டதால் செப்டம்பர் 9ம் தேதி வாக்குப்பதிவு நடப்பது உறுதியாகி விட்டது. மக்களவை, மாநிலங்களவை எம்.பிக்ள் இதில் வாக்களிப்பார்கள். பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு அதிக எம்.பிக்கள் இருப்பதால் பாஜக வேட்பாளர் வெற்றி பெற வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.