துணை ஜனாதிபதியாக இருந்து ஜெகதீப் தன்கர் திடீரென ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமா கடிதத்தில் உடல்நிலையை கருதி ராஜினாமா செ்யததாக கூறப்பட்டிருந்தபோதிலும், பாஜகவுக்கும், அவருக்கும் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து அவருக்கு நெருக்கடி கொடுத்து ராஜினாமா செய்ய வைக்கப்பட்டார் என டெல்லி அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.
பீகாரில் இன்னும் 3 மாதத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடக்கிறது. அங்கு நிதிஷ்குமார் முதல்வராக இருக்கிறார். இந்த முறையும் அவரை முதல்வர் வேட்பாளராக அறிவித்தால் பாஜகவுக்கு பின்னடைவு ஏற்படும் என்பதால் அவரை அங்கிருந்து வெளியேற்ற பாஜக முடிவு செய்தது. நிதிஷ்குமாரை வெளியேற்ற வேண்டுமானால், அவருக்கு ஏதாவது ஒரு பதவி கொடுத்தாக வேண்டும். அதற்காக தன்கரை ராஜினாமா செய்ய வைத்து அந்த பதவிக்கு நிதிஷ்குமாரை கொண்டு வர பாஜக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தன்கர் ராஜினாமா செய்த மறுநாளே புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கியது. தன்கரின் ராஜினாமா ஜனாதிபதி உடனடியாக ஏற்றுக்கொண்டார். உடனடியாக இது குறித்து அரசிதழில் வெளியிடப்பட்டது.
60 நாளில புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்ய வேண்டும். தற்போது நாடாளுமன்ற கூட்டம் நடந்து வருகிறது. ஆகஸ்ட் 21ம் தேதி வரை இந்த கூட்டம் நடைபெறும். அதற்குள் தேர்தலை நடத்தி விட மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இந்த தேர்தலில் எம்.பிக்கள் மட்டும் ஓட்டு போடுவார்கள். நாடாளுமன்ற இரு அவைகளிலும், பாஜக மற்றும் அத்ன கூட்டணி கட்சிகளுக்கு மெஜாரிட்டி உள்ளது என்பதால் பாஜக நிறுத்தும் வேட்பாளர் வெற்றி பெற்று விடலாம்.
இதை கருத்தில் கொண்டு தேர்தல் ஏற்பாடுகள் ஜரூராக நடந்து வருகிறது. இன்று தேர்தல் அதிகாரியை தேர்தல் ஆணையம் அறிவித்தது. மாநிலங்களவை செயலாளர் பி.சி. மோடி தேர்தல் நடத்தும் அதிகாரியாக நியமிக்கப்பட்டு உள்ளார். மாநிலங்களவை இணைச் செயலாளரானகரீமா ஜெயின், மாநிலங்களவை இயக்குனர் விஜயகுமார் உதவி தேர்தல் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இன்று தேர்தல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டதால், இன்று அல்லது நாளை தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அதைத்தொடர்ந்து நிதிஷ்குமார் அல்லது பாஜகவுக்கு மிகவும் நெருக்கமான நபர்களில் இருந்து ஒருவரை வேட்பாளராக தேர்வு செய்ய பாஜக திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் தற்போதைய ராஜ்யசபா துணைத்தலைவர் பெயரும் பரிசீலிக்கப்படுகிறது.