உதகையில் நடைபெறும் துணைவேந்தர்கள் மாநாட்டு துவக்க விழா மற்றும் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் இன்று கோவை வந்தார்.
டெல்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் காலை 10.40 மணியளவில் கோவை விமான நிலையம் வந்தடைந்தார். துணை ஜனாதிபதியுடன் அவரது துணைவியாரும் வந்திருந்தார். குடியரசுத் துணைத் தலைவரை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், கோவை நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார், மேயர் ரங்கநாயகி, மாவட்ட ஆட்சியர் பவன்குமார், மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், மேற்கு மண்டல காவல்துறை தலைவர் செந்தில்குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், மாவட்ட காவல் ஆணையாளர் சரவணன் சுந்தர் ஆகியோர் வரவேற்றனர்.
முதலில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ், துணை ஜனாதிபதிக்கு புத்தகம் கொடுத்து வரவேற்றார். தொடர்ந்து எம்.பி. கணபதி ராஜ்குமார், அடுத்ததாக மேயர் ரங்கநாயகி மற்றும் அதிகாரிகள் அனைவரும் புத்தகங்கள் கொடுத்து வரவேற்றனர். அமைச்சர் புத்தகம் கொடுத்ததும் அதை வாங்கிக்கொண்ட துணை ஜனாதிபதி அந்த புத்தகம் குறித்து அமைச்சரிடம் ஏதோ கேட்டார். 3வதாக மேயர் கொடுத்த புத்தகத்தை வாங்கி கொண்டார். பின்னர் அந்த புத்தகத்தை பார்த்ததும், அமைச்சர் கயல்விழி கொடுத்த புத்தகம் குறித்து ஒப்பிட்டு ஏதோ பேசினார். அதிகாரிகளிடமும் புத்தகங்களை வாங்கி கொண்டு உற்சாகமாக பேசியபடி புறப்பட்டார்.
இதனையடுத்து, தனி ஹெலிகாப்டர் மூலம் குடியரசுத் துணைத் தலைவர் உதகைக்கு சென்றார்.
இன்றும், நாளையும் நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்ட பின்னர் ஞாயிற்றுக்கிழமை காலை கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் நடைபெறும் கருத்தரங்கில் கலந்து கொள்ளும் குடியரசுத் துணைத் தலைவர், அன்றைய தினமே டெல்லி புறப்படுகிறார்.
குடியரசுத் துணைத் தலைவர் வருகையையொட்டி கோவை மற்றும்
நீலகிரி மாவட்டங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள்பலப்படுத்தப்பட்டு உள்ளது.