Skip to content

குளித்தலை அருகே விசிகவினர்-பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கருப்பத்தூர் ஊராட்சி வேங்காம்பட்டியில் உள்ள ஆதிதிராவிட காலனி மக்களுக்கு கடந்த சில மாதங்களாக சரிவர குடிநீர் வழங்கப்படவில்லை என்றும் மேலும் அப்பகுதி பொதுமக்கள் தெரு மின் விளக்கு வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி பலமுறை ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திற்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என கூறப்படுகிறது.

இதனால் அதிருப்தி அடைந்த பகுதி பொதுமக்கள் மற்றும் கரூர் கிழக்கு மாவட்ட விடுதலை சிறுத்தை கட்சியினர் மாவட்ட செயலாளர் சக்திவேல் தலைமையில் இன்று லாலாபேட்டை பேருந்து நிறுத்தத்தில் கரூர் திருச்சி தேசிய சாலையின் குறுக்கே அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட அப்பகுதி பெண்கள் காலி குடங்களுடன் அமர்ந்து ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய நிர்வாக அதிகாரிகளை கண்டித்தும் கண்டன கோஷங்களையும் முழக்கமிட்டனர். தகவல் அறிந்து வந்த கிருஷ்ணராயபுரம் வட்டாட்சியர் பிரபாகரன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அமைதி பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அமைதி பேச்சு வார்த்தைக்கு உடன்படாததை அடுத்து காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுப்பட்ட 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் விசிக கட்சியினரை கைது செய்து லாலாபேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சிறை வைத்தனர். இதனால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

error: Content is protected !!