தஞ்சாவூர் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினரும் – அமமுக துணை பொதுச் செயலாளருமான ரெங்கசாமி வீட்டில் இரண்டு மணி நேரத்துக்கு மேலாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகப் பொதுச் செயலாளர் ரெங்கசாமி இல்லம் தஞ்சாவூர் மாவட்டம் தளவாய் பாளையத்தில் அமைந்துள்ளது. இவர் கடந்த 2011 முதல் 2016 வரை தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது வருவாய்க்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு துறையினர் இன்று காலை 7 மணி முதல் அவரது வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர். லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி அன்பரசன் தலைமையில் ஐந்து மேற்பட்ட அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
தற்போது முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ரங்கசாமி சென்னையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. வீட்டில் அவரது மகன் மட்டுமே உள்ள நிலையில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெறுவதை அறிந்து அவரது ஆதரவாளர்கள் தற்போது வீட்டின் முன் குவிந்து வருகின்றனர். பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.