அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். சிலதினங்களுக்கு முன் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் தங்கள் கூட்டணிக்கு பிரமாண்ட கட்சி வருகிறது என்றார்.
அவர் நடிகர் விஜயின் தவெகவை மனதில் வைத்து தான் சொல்கிறார் என்ற கருத்து பரவியது. இதற்கு விஜய் தரப்பில் இருந்து எந்த ரியாக்ஷனும்இல்லை. இந்த நிலையில் நேற்று எடப்பாடி பேசிய கூட்டத்தில் நடிகர் விஜய், சீமான் ஆகியோர் அதிமுக கூட்டணிக்கு வரவேண்டும் என நேரடியாகவே அழைப்பு விடுத்தார்.
இந்த நிலையில் தவெக சார்பில் இன்று எக்ஸ் தளத்தில் ஒரு பதிவு வெளியிடப்பட்டது. அதில், முதல்-அமைச்சர் வேட்பாளர், வெற்றித் தலைவர் விஜய் தலைமையில் 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம், மிகப் பெரிய வெற்றியைப் பெற்று, புதிய வரலாறு படைக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எடப்பாடி அழைப்பு குறித்து சீமான் இன்று கூறியதாவது: “தேர்தலுக்காக கொள்கைகளை விடுத்து கூட்டணி அமைத்த எத்தனையோ கட்சிகள் காணாமல் போயுள்ளன. அந்த வரிசையில் நாம் தமிழர் கட்சி இடம் பெறாது. நாங்கள் என்றைக்குமே தனித்து தான் போட்டியிடுவோம்” என்றார்.
சீமான் தன்னுடைய நிலைப்பாட்டை தெளிவாக கூறிவிட்டார். தனித்து தான் போட்டி என்று அவர் கூறிவிட்டதால், அதிமுக கூட்டணிக்கு அவர் போக மாட்டார் என்பது உறுதியாகி விட்டது.
அடுத்ததாக விஜய், முதல் அமைச்சர் வேட்பாளர் என்றும், விஜய் தலைமையில் தான் தவெக புதிய வரலாறு படைக்கும் என்றும் கூறி உள்ளதால், அவரும் அதிமுக கூட்டணிக்கு வர வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.
தற்போது அதிமுக கூட்டணியில் பாஜக மட்டுமே உள்ளது. இப்போது எடப்பாடி கூறிய பிரமாண்ட கட்சி எது என்ற கேள்வியை அனைவரும் கேட்கத் தொடங்கி உள்ளனர்.