கரூரில் தவெக தலைவர் விஜய் 27ம் தேதி மக்கள் சந்திப்பை நடத்தினார். விஜயை பார்ப்பதற்காக அந்த கூட்டத்துக்கு ஏராளமானோர் வந்திருந்தனர். இதில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவத்திற்கு பிறகு விஜய் எங்கும் வௌியில் செல்லாமல் இருந்து வந்தார். அப்போது பட்டினபாக்கம் இல்லத்திற்கு சென்று வந்தார். கட்சியின் அடுத்தடுத்த சுற்றுப்பயணங்களும் தள்ளிவைக்கப்பட்டது. 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணைப்பொது செயலாளர் நிர்மல்குமார், கரூர் மேற்கு மா.செயலாளர் மதியழகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் நேற்று மதியழகனை கைது செய்தனர். மேலும் தவெக சமூக வலைத்தள நிர்வாகிகள் மீதும் வழக்குகள் பாய்ந்தன. கடந்த 3 நாட்களாக விஜய் எந்த பேட்டியும் தரவில்லை. கரூர் சம்பவம் தொடர்பாக நேற்று பரபரப்பான வீடியோ ஒன்றை பதிவிட்டார். அந்த வீடியோவில் கரூரில் எங்களுக்கு தரப்பட்ட இடத்தில்தான் பேசினோம். நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை. பழிவாங்க நினைத்தால் என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள் என்று விஜய் உருக்கமாக வீடியோ வௌியிட்டார்.
இந்நிலையில் தவெக தலைமை நிலையச் செயலகம் வௌியிட்ட அறிக்கையில் …
கழகத் தோழர்களுக்கு வணக்கம்.நம் சொந்தங்களை இழந்த வேதனையிலும் வருத்தத்திலும் நாம் இருக்கும் இச்சூழலில், நம் கழகத் தலைவர் அவர்களின் அடுத்த இரண்டு வாரங்களுக்கான மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியானது தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது. இந்த மக்கள் சந்திப்பு தொடர்பான புதிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்பதை நம் கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலோடு தெரிவித்துக்கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.