Skip to content

விஜயின் தேர்தல் வாக்குறுதி… ஒற்றை வரியில் முடித்த இ.பி.எஸ்

இலவசம் குறித்து தவெகவினர் சில கருத்துகளை தெரிவித்திருந்தனர். இந்நிலையில் விஜயே பெண்களுக்கு பல இலவசத்திட்டங்களை அறிவித்துள்ளாரே? என்ற கேள்விக்கு, இதை நீங்கள் அவரிடம் தான் கேட்க வேண்டும். ஒவ்வொரு கட்சியும் தேர்தலை ஒட்டி இதுபோன்ற அறிவிப்புகளை வெளியிடுவது வழக்கம் என ஈபிஎஸ் பதில் அளித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் முகாமிட்டுள்ளார். இந்நிலையில் இன்று அதிமுக மகளிர் அணியினர், மகளிர் தின விழாவை ஒட்டி அவரிடம் வாழ்த்து பெறுவதற்காக நெடுஞ்சாலை நகர் வந்திருந்தனர். பின்னர் மகளிர் அணியினருடன் எடப்பாடி பழனிச்சாமி கேக் வெட்டி, மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, “மகளிர் அனைவருக்கும் இனிய இதயபூர்வமான மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அதிமுக ஆட்சி அமைந்தவுடன் மகளிர் உதவித்தொகை ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் 2000 ரூபாய் வழங்கப்படும். மேலும் அம்மா இருசக்கர வாகனம் திட்டம் திமுக ஆட்சியில் நிறுத்தப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சி அமைந்த உடன் 5 லட்சம் மகளிருக்கு 25 ஆயிரம் ரூபாய் மானியத்தில் இருசக்கர வாகனம் வழங்கப்படும்” என்றார்.

தொடர்ந்து விஜய் அவர்கள் நேற்று மகளிர் உதவித் தொகை 2500 ரூபாய் வழங்கப்படும் என்றும் இலவச பேருந்து பயண திட்டத்தையும் அறிவித்துள்ளாரே என்ற கேள்விக்கு , ஒவ்வொரு கட்சியும், அதன் தலைவர்களும் தேர்தல் நேரத்தில் அவரவர்களின் விருப்பப்படி தேர்தல் அறிக்கை வெளியிடுவது வழக்கம் என்றார். உங்கள் தேர்தல் அறிக்கையை போலவே உள்ளதே என்ற கேள்விக்கு, இது குறித்து அவரிடம் தான் நீங்கள் கேட்க வேண்டும் என்றார்.

error: Content is protected !!