Skip to content

வார்டன் வீடியோ எடுத்து தந்தைக்கு அனுப்பியதால் விபரீதம்: பிடெக் மாணவர் 4-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை

உத்தரபிரதேச மாநிலம் ஜான்சியைச் சேர்ந்த உதித் சோனி (20) என்ற பிடெக் இரண்டாம் ஆண்டு மாணவர், கிரேட்டர் நோய்டாவில் உள்ள தனியார் விடுதியில் தங்கி படித்து வந்தார். கடந்த வெள்ளிக்கிழமை இரவு இவர் மதுபோதையில் விடுதிக்கு வந்ததாகக் கூறி, அங்கிருந்த வார்டன் அவரை வீடியோ எடுத்து மாணவரின் தந்தைக்கு அனுப்பியுள்ளார். இதனைப் பார்த்து ஆத்திரமடைந்த தந்தை, தொலைபேசி வாயிலாக மாணவரைக் கடுமையாகக் கண்டித்ததோடு, படிப்பை நிறுத்திவிட்டு வீட்டிற்கு வருமாறு மிரட்டியுள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவர், விடுதியின் 4-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இச்சம்பவம் குறித்து சக மாணவர்கள் அதிர்ச்சியூட்டும் தகவலைத் தெரிவித்துள்ளனர். வார்டன் மற்றும் அங்கிருந்த பவுன்சர்கள் பிவிசி பைப்பால் மாணவரைத் தாக்கி அவமானப்படுத்தியதே தற்கொலைக்கு முக்கியக் காரணம் என்று அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் விடுதி ஜன்னல்கள் மற்றும் அங்கிருந்த பேருந்தை அடித்து நொறுக்கிச் சூறையாடினர். மாணவரின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், விடுதி உரிமையாளர் மற்றும் வார்டன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தற்போது சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வரும் போலீசார், இருவரைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அசம்பாவிதங்களைத் தவிர்க்க விடுதி முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

error: Content is protected !!