Skip to content

விவசாயிகளுக்கு எடப்பாடி செய்தது துரோகம்; முதல்வர் ஸ்டாலின் காட்டம்!

  • by Authour

ஈரோடு மாவட்டம், பவானி அரசு கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பேசிய தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஆளுநர் ஆர்.என். ரவி மீது தொடர்ச்சியாக கடுமையான வார்த்தைப் பிரயோகங்களால் தாக்கினார். “விவசாயிகளின் நெல் ஈரப்பதத் தளர்வு கோரிக்கைக்காக பிரதமரைச் சந்திக்கப் போவதாக எடப்பாடி பழனிசாமி சொன்னால், தமிழ்நாடு அரசின் சார்பில் நானே கார் ஏற்பாடு செய்து தருகிறேன். அதுவும் வேர்க்காத அளவுக்கு நல்ல ஏ.சி. கார் தந்து டெல்லிக்கு அனுப்பி வைக்கிறேன்” என கிண்டலடித்துப் பேசினார்.

மேலும், “மேற்கு மண்டலத்தைச் சேர்ந்தவர் எனக் கூறும் எடப்பாடி பழனிசாமி ஈரோட்டுக்கு இதுவரை என்ன செய்திருக்கிறார்? ஒன்றும் செய்யவில்லை. அவர் ஒரு துரோகி. இப்போதும் தொடர்ந்து துரோகம் செய்து கொண்டிருக்கிறார். அவரை விவசாயி எனச் சொல்வது உண்மையான உழவர்களை அவமானப்படுத்துவதற்கு சமம்” என்று கடுமையாகச் சாடினார் முதலமைச்சர். எடப்பாடியின் சொந்த மாவட்டத்திலேயே இவ்வளவு கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதே விழாவில் ஆளுநர் ஆர்.என். ரவி மீதும் விமர்சனங்களை முன் வைத்தார். “அமைதிப் பூங்காவாகத் திகழும் தமிழ்நாட்டை தீவிரவாதிகள் உலவும் மாநிலமாகவும், தமிழர்களை தேச விரோதிகள் போலவும் சித்தரிக்க முயல்கிறார் ஆளுநர். இது அரசியல் சாசனப் பொறுப்புக்கு துளியும் பொருந்தாத செயல். தமிழ்நாட்டின் வளர்சியை அவர் நிரந்தரமாகக் கெடுக்க நினைக்கிறார். அவரது திமிரை நாம் ஒன்றாகச் சேர்ந்து அடக்க வேண்டும்” என்று ஆவேசமாகப் பேசினார்.

“ஒன்றியத்தில் பாஜக ஆட்சி நடந்த போதுதான் புல்வாமா தாக்குதல், டெல்லி செங்கோட்டை குண்டுவெடிப்பு போன்றவை நடந்தன. தீவிரவாதத் தாக்குதலில் மக்கள் உயிரிழப்பதைத் தடுக்க முடியாத அரசை ஆளுநர் புகழ்ந்து பேசுகிறார்” எனவும் ஸ்டாலின் குற்றம்சாட்டினார். ஈரோடு பொதுக்கூட்டத்தில் திமுக தொண்டர்கள் “ஆளுநரே ஓடு… ஓடு…” என முழக்கமிட்டதும் குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!