நாடு முழுவதும் மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்த அரசியல் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.
இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. கடைசியாக 2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதற்கு அடுத்தபடியாக 2021-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கான பணிகள் 2020 ஏப்ரல் மாதத்தில் தொடங்கியிருக்க வேண்டும். ஆனால், கொரோனா பெருந்தொற்று பரவியதையடுத்து, இந்த பணி தள்ளிவைக்கப்பட்டது. அதன் பிறகு மக்களவைத் தேர்தல் நடைபெற்றதால் மீண்டும் தள்ளிப்போனது.
இந்நிலையில், மிகவும் சக்தி வாய்ந்த அரசியல் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் (சிசிபிஏ) கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்குப் பிறகு மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மக்கள்தொகை கணக்கெடுப்பு என்பது இந்திய அரசியலமைப்பின் 246-வது பிரிவின்படி, மத்திய அரசு பட்டியலின் வரிசை எண் 69-ல் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, இது மத்திய அரசு தொடர்புடைய விவகாரம் ஆகும்.
ஆனால், சில மாநில அரசுகள் மக்கள் தொகை கணக்கெடுப்பில் சாதிவாரி ஆய்வுகளை நடத்தி உள்ளன. இதில் சில மாநிலங்கள் சிறப்பாக செய்துள்ளன. ஆனால், சில மாநிலங்கள் வெளிப்படைத்தன்மை இல்லாமல் அரசியல் கோணத்தில் மட்டுமே இத்தகைய ஆய்வுகளை நடத்தி உள்ளன. இது போன்ற ஆய்வுகள் சமூகத்தில் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளன.
அரசியல் காரணமாக சமூகக் கட்டமைப்பு பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக, சாதிவாரி ஆய்வுக்குப் பதில், சாதிவாரி கணக்கெடுப்பை மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சேர்க்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த பணி எப்போது தொடங்கும் என தேதி அறிவிக்கப்படவில்லை. இந்த பணி இந்த ஆண்டு இறுதியில் தொடங்கினாலும் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் சென்சஸ் பணிகள் முடிவடைய ஒன்றரை வருடத்திற்கு மேல் ஆகும். இதற்கு 12ஆயிரம் கோடி செலவாகலாம் என்றும் கணிக்கப்படுகிறது.
மத்திய அரசின் இந்த முடிவுக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இதுகுறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் நேற்று கூறும்போது, “நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவோம் என்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தேன். 50 சதவீத இடஒதுக்கீடு உச்சவரம்பையும் நீக்குவோம் என்று கூறினேன். ஆனால், மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மறுப்பு தெரிவித்து வந்தது. இப்போது திடீரென அதைச் செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இது வரவேற்கத்தக்கது. ஆனால், இதற்கு காலவரம்பு நிர்ணயிக்க வேண்டும்” என்றார்.
இதுபோல காங்கிரஸ் தலைவர் கார்கே, உ.பி. முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட அனைத்து கட்சித்தலைவர்களும், சாதி வாரி கணக்கெடுப்பை வரவேற்றுள்ளதுடன், இது எப்போது தொடங்கும், எப்போது இந்த பணி முடியும் என்பதற்கு காலக்கெடு நிர்ணயிக்க வேண்டும் . அதுபற்றி அமைச்சர் அறிவிப்பில் எதுவும் கூறப்படவில்லை என்று கூறி உள்ளனர்.