பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் யார் என்பதில் ராமதாஸ், அன்புமணி ஆகியோர் இடையே மோதல் நிலவுகிறது. இருவருமே தங்களை தலைவர் என கூறிக்கொண்டு தங்களுக்கு பிடிக்காதவர்களை கட்சியில் இருந்து நீக்கி வருகிறார்கள்.
பாமகவுக்கு 5 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இதில் கட்சியில் கவுரவ தலைவர் மற்றும் சட்டமன்ற கட்சி தலைவர் பதவியில் ஜி.கே. மணியும், கொறடாவாக சேலம் அருளும் உள்ளனர். மற்ற 3 எம்.எல்.ஏக்களான மயிலம் சிவக்குமார், மேட்டூர் சதாசிவம், வெங்கடேஸ்வரன் ஆகியோர் அன்புமணி ஆதரவாளர்களாக உள்ளனர்.
இந்த நிலையில் சேலம் அருள் எம்.எல்.ஏவை கட்சியில் இருந்து நீக்கியதாக அன்புமணி அறிவித்தார். அவரை நீக்கும் அதிகாரம் அன்புமணிக்கு இல்லை என்று ராமதாஸ் அறிவித்தார்.
இந்த நிலையில் இன்று அன்புமணி ஆதரவு எம்.எல்.ஏக்கள் மூவரும் சட்டமன்ற செயலாளரை சந்தித்து பாமக கொறடாவாக மயிலம் சிவக்குமாரை அன்புமணி நியமித்துள்ளதாகவும், அவரை கொறடாவாக அறிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி ஒரு கடிதத்தை கொடுத்தனர். இந்த கடிதத்தின் மீது என்ன முடிவு எடுக்கப்படும் என்பது சட்டமன்றம் கூடும்போது தெரியவரும்.
இந்த நிலையில் கொறடாவை நீக்கும் அதிகாரம் சட்டமன்ற கட்சித்தலைவரான ஜி.கே. மணிக்கு தான் உள்ளது என்று சேலம் அருள் கூறி உள்ளார்.
இதற்கிடையே சேலம் அருள் எம்.எல்.ஏ. சட்டப்பேரவை தலைவர் அப்பாவுவை சந்தித்து பாமக கொறடாவாக தான் தொடருவதாக கடிதம் வழங்க இருக்கிறா ர். அதற்கான கடிதத்தை ஜி.கே. மணியிடம் இருந்து அவர் பெற்று சென்று உள்ளார்.