தேமுதிகவின் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னை கோயம்பேட்டில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள், தேர்தல் குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது, 2026 தேர்தல் கூட்டணி, மாநாடு ஏற்பாடு, நிதி திரட்டல் உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், “வரும் ஜனவரி 9-க்கு முன்பு கூட்டணி அறிவிக்கலாம் அல்லது சூழ்நிலைக்கு ஏற்ப தள்ளிப் போகலாம். நாங்கள் இடம்பெறும் கூட்டணியே நிச்சயம் வெற்றி பெறும். கூட்டணி தொடர்பான தகவல்களை மறைப்பதற்கு அது ஒன்றும் சிதம்பர ரகசியம் இல்லை. தொண்டர்களிடம் ஆலோசனை செய்து, அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப கூட்டணி குறித்த முடிவுகள் எடுக்கப்படும். பின்னர், அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்” என்று கூறினார்.
அத்துடன், ஜனவரி 9ஆம் தேதி கடலூரில் நடக்கும் மாநில மாநாட்டில் கூட்டணி நிலைப்பாடு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்ற தெரிவித்த பிரேமலதா விஜயகாந்த், இரண்டு கட்ட சுற்றுப்பயணங்களுக்கு பிறகு, மூன்றாம் கட்ட பயணம் நவம்பர் 16 ஆம் தேதி தொடங்கவுள்ளதாகவும், இதில் மாவட்ட செயலாளர்களின் செயல்திறன் மதிப்பீடு, தேர்தல் முன்னெச்சரிக்கை திட்டங்களில் திருத்தங்கள், மக்களை மாநாட்டுக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.
பிரேமலதா விஜயகாந்த் பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற பிறகு நடக்கும் முதல் மாநில மாநாடு இது என்பதால், கடலூர் மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்தத் திட்டமிட்டிருப்பதாகவும், இதற்கு ஒவ்வொரு மாவட்டச் செயலாளரும் நிதி திரட்டல், மக்கள் பங்களிப்பு குறித்து பொறுப்பேற்க வேண்டும் என்றும் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

