Skip to content

போதை கணவனை கட்டிப்போட்ட மனைவி: ‘கையில் துப்பாக்கி இருக்கு’ – அதிர வைத்த மாமியார்

உத்தர பிரதேச மாநிலம் அலிகார் அருகே உள்ள ஹமித்பூர் கிராமத்தில், குடும்பத் தகராறு காரணமாக கணவனை மனைவி கட்டிலில் கட்டிப்போடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அக்கிராமத்தைச் சேர்ந்த பிரதீப் என்பவர் மதுப் பழக்கத்திற்கு அடிமையானவர் என்றும், அவர் அடிக்கடி மது அருந்திவிட்டு வந்து குடும்பத்தினர் மற்றும் அண்டை வீட்டாருடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவரது மனைவி சோனி, ஒரு கட்டத்தில் தனது கணவன் பிரதீப்பை கயிற்றால் கட்டிலில் கட்டி வைத்துள்ளார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தகவலறிந்த பிரதீப்பின் தாயார் மற்றும் கிராம மக்கள் விரைந்து வந்து அவரை மீட்டுள்ளனர்.

இந்த விவகாரத்தில் தற்போது ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. பிரதீப்பின் தாயார் காவல் நிலையத்தில் ஒரு புகைப்படத்தை ஆதாரமாகக் காட்டி தனது மருமகள் மீது அதிரடி புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்தப் புகைப்படத்தில் சோனி கையில் நாட்டுத் துப்பாக்கி போன்ற ஒரு ஆயுதத்தை வைத்திருப்பது பதிவாகியுள்ளது. தனது மகனை கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தத் துப்பாக்கியைக் காட்டி சோனி மிரட்டி வருவதாகவும், எப்போது வேண்டுமானாலும் அவரைக் கொன்றுவிடுவேன் என்று மருமகள் மிரட்டுவதாகவும் மாமியார் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த புகாரைத் தொடர்ந்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த வீடியோ மற்றும் துப்பாக்கியுடன் இருக்கும் புகைப்படத்தின் உண்மைத்தன்மை குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. கணவனை மனைவி கட்டிப்போட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, மருமகள் மீது மாமியார் அளித்துள்ள இந்தத் துப்பாக்கிப் புகார் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!