கேரளாவில் ஓணம் பண்டிகை பம்பர் சிறப்பு குலுக்கல் நடந்தது. ‘இதற்கான டிக்கெட்டுகள் விற்பனை ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்றது. ஒரு டிக்கெட் ரூ.500-க்கு விற்கப்பட்டது. முதல் பரிசு ஒரு நபருக்கு ரூ25 கோடி, இரண்டாம் பரிசாக 20 பேருக்கு தலா ரூ1.கோடி, மூன்றாம் பரிசாக 20 பேருக்குதலா ரூ.50 லட்சம் என அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் பலருக்கு ரூ5 லட்சம், ரூ2 லட்சம் மற்றும் பல தொகைகள் பரிசாக அறிவிக்கப்பட்டது. பம்பர் பரிசு கோடிகள் மற்றும் லட்சங்களாக இருந்ததால் லாட்டரி சீட்டுகளை பலர்போட்டிபோட்டு வாங்கினர்.
இதனால் ஓணம் பண்டிகை பம்பர் குலுக்கல் லாட்டரி சீட்டுகள் 70 லட்சத்துக்கும் மேல் விற்பனையாகின. ஓணம் பண்டிகை பம்பர் சிறப்பு குலுக்கல் நேற்று முன்தினம் (4-ந்தேதி) நடைபெற்றது. முதலில் குலுக்கல் கடந்த மாதம் 27-ந்தேதி வைக்கப்பட்டிருந்தது. தொடர் மழை காரணமாக லாட்டரி சீட்டுகள் விற்பனை சரியாக நடக்கவில்லை என்பதால் குலுக்கல் தேதியை நீட்டிக்குமாறு வியாபாரிகள் வலியுறுத்தியதால் அக்டோபர் 4-ந்தேதிக்கு மாற்றப்பட்டது.
அதில் பாலக்காடு மாவட்டத்தில் வாங்கிய நபருக்கு முதல் பரிசான ரூ.25கோடி விழுந்தது. ஆனால் அவர் யார்? என்ற விவரம் வெளியாகவில்லை. ஆனால் அந்த நபர் கொச்சி நெட்டூர் பகுதியை சேர்ந்த பெண் என்பதை, பரிசு பெற்ற டிக்கெட்டை விற்பனை செய்த லாட்டரி முகவர் லத்தீஷ் உறுதிப்படுத்தினார். மேலும் அந்த பெண் தனது வீட்டை பூட்டிவிட்டு எங்கோ சென்று விட்டார். கேரள லாட்டரி பம்பர் குலுக்கலில் பம்பர் பரிசு பெறக்கூடிய நபர்களிடம் பலர் பண உதவி கேட்டு தொல்லை கொடுப்பது சமீபகாலமாக நடந்து வருகிறது. முன்பின் தெரியாத நபர்கள் கூட பணம் கேட்டு தொல்லை கொடுத்ததாக இதற்கு முன் பரிசுபெற்றவர்கள் தெரிவித்திருந்தனர். இதனால் பம்பர் பரிசு பெற்றவர்கள் தங்களின் பெயர், முகவரி உள்ளிட்ட எந்த விவரத்தையும் வெளியிட அச்சப்படுகிறார்கள். அதேபோல் தான் தற்போது குலுக்கலில் ரூ.25கோடி பரிசு பெற்ற பெண்ணும் தனக்கு பலர் தொல்லை கொடுப்பார்கள் என நினைத்து வீட்டை பூட்டிவிட்டு சென்றிருக்கிறார்.
பம்பர் குலுக்கலில் முதல் பரிசு பெற்றுள்ள அந்த பெண் அதிர்ஷ்டத்தை நம்புபவர் இல்லை என்றும் சாலையில் நடந்து சென்ற அவர் பம்பர் லாட்டரி சீட்டுகள் விற்பனை பரபரப்பாக நடப்பதை பார்த்து கடைக்கு வந்து டிக்கெட் வாங்கினார் எனவும் டிக்கெட் முகவர் லத்தீஷ் தெரிவித்துள்ளார். கடைசியாக அதிர்ஷ்டத்தை நம்பாத அந்த பெண்ணுக்கே பம்பர் குலுக்கலில் முதல் பரிசான ரூ.25கோடி விழுந்துள்ளது.