அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தா.பழூர் ஒன்றியத்தை சேர்ந்த கீழசிந்தாமணி கிராமத்தில், சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் குடிநீருக்காக விநியோகிக்கப்படும் போர்வெல் பழுதாகி இருந்ததால், குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு கடந்த 4 மாத காலமாக சரிவர குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இதுகுறித்து தா.பளூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பொதுமக்கள் மனு அளித்தும், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள், காலி குடங்களுடன் சாலையில்
அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த போலீசார், போராட்டம் நடத்திய மக்களை கலந்து செல்லுமாறு கேட்டுக் கொண்டனர். இதனால் பொது மக்களுக்கும், போலீசாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அங்கிருந்த போலீசார் உடனே கலைந்து செல்ல வேண்டும், இல்லை என்றால் வழக்கு பதிவு செய்வேன் என்றார். இதில் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், எங்களை கைது செய்து கொள்ளுங்கள் நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பொதுமக்கள் நடத்திய இப் போராட்டம் காரணமாக கும்பகோணம் – ஜெயங்கொண்டம் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.