கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் பனியூர் எஸ்டேட் பகுதியை சேர்ந்தவர் வேலுசாமி (62) அப்பகுதியில் உள்ள ஏலக்காய் தோட்டத்தில் பணியாற்றி வந்தார். தொழிலாளி வேலுசாமி இன்று காலை வழக்கம்போல் ஏலக்காய் தோட்டத்திற்கு வேலை செய்ய சென்றிருந்தார். காலை 10 மணியளவில் ஏலக்காய் தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்தபோது அங்கு வந்த காட்டு யானை வேலுசாமியை தாக்கியது. வேலுசாமியின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வேலை செய்துகொண்டிருந்த சக தொழிலாளர்கள் அவரை மீட்க முயற்சித்தனர். ஆனால், காட்டு யானை வேலுசாமியை தொடர்ந்து தாக்கியதுடன் பிறரையும் விரட்டியது. சுமார் 1 மணிநேரத்திற்குப்பின் காட்டு யானை வனப்பகுதிக்கு சென்றதை தொடர்ந்து வேலுசாமியை மீட்ட சக தொழிலாளர்கள் அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், வேலுசாமியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார், வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
