அனைத்து தரப்பபு மக்களும் கடற்கரையில் பிரமாண்டமாக திருமண நிகழ்ச்சிகளை நடத்தும் வகையில், ‘பீச் வெட்டிங்’ என்ற திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.
சென்னை போன்ற பெரு நகரங்களில், திருமண நிகழ்ச்சிகளுக்கு, ஆடம்பர மண்டபம், நட்சத்திர ஹோட்டல்கள் உள்ளிட்ட இடங்களையே பிரதானமாக தேர்வு செய்கின்றனர். முக்கிய பிரமுகர்கள், பெரிய தொழிலதிபர்கள், கடற்கரை அருகில் உள்ள ரிசார்ட்களில், திருமண விழாக்களை நடத்துகின்றனர்.பொதுவாக, இந்த ரிசார்ட்களில் திருமண விழா ஏற்பாடு செய்ய, லட்சக்கணக்கில் செலவாகும். இதன் காரணமாக, பீச் ரிசார்ட்டுகளில் திருமண நிகழ்ச்சிகளை நடத்துவது என்பது, நடுத்தர மக்களுக்கு பெரிய கனவாகவே இருக்கிறது.
இந்நிலையில், கடற்கரையில் திருமண ஏற்பாடுகளை செய்யும் வகையில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம், ‘பீச் வெட்டிங்’ என்ற கடற்கரை கல்யாண திட்டத்தை, புதிதாக துவங்கி உள்ளது. இதன்படி, சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள மாமல்லபுரம் தமிழ்நாடு ஹோட்டல் ரிசார்ட்டில் இனி கடற்கரையில் திருமணம் செய்து கொள்ள முடியும்.கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள, மாமல்லபுரம் தமிழ்நாடு ஹோட்டல் ரிசார்ட்டில் உள்ள கடற்கரை மணல் வெளியில், திருமண நிகழ்ச்சிகளை பிரமாண்டமாக நடத்தலாம். கடற்கரை கல்யாணம் திட்டத்தில், ‘புக்கிங்’ செய்வதற்கு பராமரிப்பு தொகையாக, 10,000 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். நபர் ஒருவருக்கு உணவு கட்டணமாக,சைவம் 700 ரூபாயும், அசைவ உணவுக்கு, 1,100 ரூபாயும் வசூலிக்கப்படும். விருப்பத்திற்கு ஏற்ப உணவு வகைகள் தயாரித்து வழங்கப்படும்.
விருந்தினர்கள் தங்குவதற்கு அறைகளும் தரப்படும். ஒரு அறைக்கு 5,000 ரூபாய் வாடகை. 22 மணி நேரம் பயன்படுத்தலாம். திருமணத்திற்கு கடற்கரையில் குறிப்பிட்ட இடம் ஒதுக்கப்படும், அதில், மேடை, அலங்காரம், மின் விளக்குகள் போன்ற ஏற்பாடுகளை, பொது மக்கள் தங்கள் செலவில் செய்துகொள்ள வேண்டும். முன்பதிவு மற்றும் கூடுதல் விபரங்களை, www.ttdconline.comஎன்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். ஏற்கனவே தனியார் வாயிலாக, இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்தாலும், இனி அரசு சார்பில் குறைந்த விலையில், இதில் திருமண நிகழ்ச்சிகளை நடத்த முடியும்.

