Skip to content

திருமண அழைப்பிதழ் கொடுத்துவிட்டு வீடு திரும்பிய இளைஞர் வேன் மோதி பலி

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே திருமணத்திற்கு இன்னும் சில நாட்களே இருந்த நிலையில், சாலை விபத்தில் மணமகன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உசிலம்பட்டி திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் கருப்பையா. இவரது மகன் பிரசன்ன வெங்கடேஷ் (26). பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவருக்கு, வரும் ஜனவரி 28-ம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. இதற்காக விடுமுறையில் ஊருக்கு வந்திருந்த பிரசன்ன வெங்கடேஷ், தனது திருமணத்திற்கான அழைப்பிதழ்களை உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு நேரில் சென்று வழங்கி வந்தார்.

நேற்று முன்தினம் இரவு, உசிலம்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் அழைப்பிதழ் கொடுத்துவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். உசிலம்பட்டி – பேரையூர் சாலையில் சென்றபோது, எதிரே வந்த வேன் ஒன்று எதிர்பாராதவிதமாக அவரது பைக் மீது பலமாக மோதியது. இந்த கோர விபத்தில் தூக்கி வீசப்பட்ட பிரசன்ன வெங்கடேஷ், பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலறிந்து வந்த உசிலம்பட்டி நகர் போலீசார், பிரசன்ன வெங்கடேஷின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், வேன் டிரைவரைப் பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணக் கொண்டாட்டத்தில் களைகட்டியிருக்க வேண்டிய வீட்டில், மணமகனின் உயிரிழப்பு அந்தப் பகுதியையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

error: Content is protected !!