உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத் பகுதியில் காதலியுடன் தனிமையில் இருப்பதற்காக பாலியல் ஊக்க மாத்திரைகளை அதிகளவில் உட்கொண்ட இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காசியாபாத்தைச் சேர்ந்த அஜய் என்ற இளைஞர், தனது காதலியுடன் விடுதி ஒன்றில் அறை எடுத்துத் தங்கியுள்ளார். அப்போது அவர் பாலில் அதிக அளவிலான பாலியல் ஊக்க மாத்திரைகளைக் கலந்து உட்கொண்டதாகத் தெரிகிறது. மாத்திரைகளை உட்கொண்ட சிறிது நேரத்திலேயே அஜய்க்குத் தீவிர உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.
அவர் மயங்கி விழுந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த காதலி, உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அஜயைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். தனது காதலன் இறந்துவிட்டதை அறிந்த அந்தப் பெண், போலீசாருக்குப் பயந்து மருத்துவமனையிலிருந்து ரகசியமாகத் தப்பியோடிவிட்டார்.
இது குறித்துத் தகவல் அறிந்த போலீசார், அஜய்யின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்டப் பரிசோதனையில், அளவுக்கு அதிகமான ஊக்க மருந்துகளை உட்கொண்டதால் ஏற்பட்ட இதய பாதிப்பே மரணத்திற்குத் தொடக்கப் புள்ளியாக இருந்திருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது. தற்போது தலைமறைவாக உள்ள அந்தப் பெண்ணைத் தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
மருத்துவர்களின் ஆலோசனையின்றி இது போன்ற மாத்திரைகளைச் சுய விருப்பத்தின் பேரில் பயன்படுத்துவது உயிருக்கே ஆபத்தாக முடியும் என மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

