திருநெல்வேலி மாவட்டம் மானூர் பகுதியை சேர்ந்தவர் சந்தனமாரி. இவரது மனைவி மகாலெட்சுமி. இவர் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே தெற்கு முத்துலாபுரத்தை சேர்ந்தவர். கர்ப்பிணியான மகாலெட்சுமிக்கு சில தினங்களுக்கு முன்பு வளைகாப்பு நடைபெற்றுள்ளது. இதற்காக சந்தனமாரி மனைவி ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில் இன்று தூத்துக்குடி – மதுரை நெடுஞ்சாலையில் மூ.கோட்டூர் விலக்கில் தனது பைக்கில் சாலையை கடக்க முயன்ற போது திருச்செந்தூரில் இருந்து புதுக்கோட்டை நோக்கி சென்ற கார் மோதி சம்பவ இடத்திலேயே சந்தனமாரி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் கிடைத்ததும் எட்டயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையில் உயிரிழந்த சந்தனமாரி உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் தூத்துக்குடி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேம்பாலம் அமைக்க வேண்டும், வேக தடுப்புக்கள் வைக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து விளாத்திகுளம் டிஎஸ்பி ( பொறுப்பு) ஜெகநாதன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர். இந்தப் போராட்டத்தினால் தூத்துக்குடி – மதுரை நெடுஞ்சாலையில் சுமார் 40 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இரு பக்கமும் நெடுஞ்சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இந்த விபத்து குறித்து எட்டையாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து காரை ஓட்டி வந்த புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தை சேர்ந்த சிவக்குமார் என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.