கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண்ணின் செல்போனுக்கு, கடந்த சில நாட்களுக்கு முன்பு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், மும்பையில் உள்ள சத்திரபதி சிவாஜி விமான நிலையம் அருகே உள்ள தனியார் டெலிகாம் நிறுவன அலுவலகத்தில் ஆதார் கார்டை பயன்படுத்தி சிம் கார்டு எடுத்து, சட்ட விரோதமான செயல்களுக்கு பயன்படுத்தி தகவல்கள் அனுப்பி உள்ளீர்கள். இதுதொடர்பாக மராட்டிய போலீசார் உங்கள் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளதாக தெரிவித்தார். இதனால் இளம்பெண் பயந்து போனார். பின்னர் அவரை மிரட்டி, வழக்கில் இருந்து விடுவிக்க குறிப்பிட்ட வங்கி கணக்குகளுக்கு பணம் செலுத்துமாறும், அனுப்பி வைத்த பணத்தை திரும்ப தருவதாக மர்ம நபர்கள் கூறியுள்ளனர்.
இதை நம்பிய இளம்பெண், அந்த வங்கி கணக்குகளுக்கு கடந்த மாதம் 20-ந் தேதி முதல் கடந்த 12-ந் தேதி வரை பல தவணைகளாக ரூ.73 லட்சத்து 20 ஆயிரம் அனுப்பி உள்ளார். ஆனால், இளம்பெண் அனுப்பிய பணம் திரும்ப கிடைக்கவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவர், இதுகுறித்து திருச்சூர் சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் ஆதார் கார்டு மூலம் சிம் கார்டு வாங்கி, சட்ட விரோதமாக தகவல்கள் அனுப்பியதாக வழக்குப்பதிவு செய்து உள்ளதாக கூறி மிரட்டி இளம்பெண்ணிடம் ரூ.73 லட்சம் மோசடி செய்தது தெரியவந்தது. இந்த மோசடியில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.