அசாம் மாநிலம் கச்சார் மாவட்டத்தைச் சேர்ந்த 28 வயது இளம்பெண் ஒருவர் தனது காதலனுடன் காரில் சென்று கொண்டிருந்தார்.இந்த நிலையில் சில்சார் நகருக்கு அருகே சென்ற போது காரை சாலையோரம் நிறுத்திவிட்டு இருவரும் தனிமையில் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென அங்கு காரில் வந்த 7 பேர் கொண்ட கும்பல், அவர்களிடம் “நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?” என்று விசாரித்து மிரட்டினர். பின்னர் அவர்களில் சிலர் காதலனை தாக்கி பிடித்துக் கொண்டனர். அவர் கண் முன்னே இளம்பெண்ணை ஒருவர் பின் ஒருவராக பாலியல் பலாத்காரம் செய்தனர். இளம்பெண் தன்னை விட்டுவிடுமாறு கையெடுத்து கும்பிட்டு கெஞ்சியும், ஈவு இரக்கம் இல்லாத அந்த கும்பல் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டது.
மேலும் அவர்களை மிரட்டி ஆன்லைன் மூலம் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.10 ஆயிரத்தை பறித்து அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதையடுத்து பாதிக்கப்பட்ட இளம்பெண் இது குறித்து போலீசில் புகார் அளித்தார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் தொடர்புடைய இருவரை போலீசார் அடையாளம் கண்டு கைது செய்தனர். அவர்கள் சில்சார் நகரத்தின் ஆசிரம சாலைப் பகுதியைச் சேர்ந்த நிலோத் பால் தாஸ் (25) மற்றும் சுபோல் தாஸ் (27) என்பது தெரியவந்தது. மற்றவர்களை தேடும் முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து போலீசார் கூறும்போது, பாதிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு மருத்துவ
பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் அவரது வாக்குமூலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. தப்பியோடியவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று தெரிவித்தனர். இதுகுறித்து சமூக ஊடகங்களில் பொதுமக்கள் கோபமாக தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கிடையே, இந்த சம்பவத்தைப் பற்றி செய்தி வெளியிட்ட சில்சாரைச் சேர்ந்த ஒரு பத்திரிகையாளரை, குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரின் குடும்பத்தினர் தாக்கியதாகக் கூறப்படுகிறது. போலீஸ் நிலையம் அருகே தன்னை அவர்கள் தடுத்து நிறுத்தி தாக்கியதாகவும், பின்னர் அங்கிருந்தவர்களால் காப்பாற்றப்பட்டதாகவும் அந்த பத்திரிகையாளர் கூறினார். இந்த தாக்குதல் தொடர்பாக அவர் அளித்த புகாரின் பேரில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

