தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அடுத்துள்ள போலையார்புரம் கிராமத்தைச் சேர்ந்த கனகராஜ் என்பவரது மகன் ராஜேஷ் (28). இவரும் இவரது உறவினரான ஜெபாஸ்லின் விஜி என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு ஜெபாஸ்லின் விஜியின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்ததால், இரு குடும்பங்களுக்கும் இடையே நீண்ட நாட்களாக முன்விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில், தனது சகோதரர் தன்னைத் தாக்குவதாகக் கூறி ஜெபாஸ்லின் விஜி, காதலன் ராஜேஷின் வீட்டிற்குத் தஞ்சமடையச் சென்றார். அவரைப் பின்தொடர்ந்து அவரது தாயார் ஜெசிந்தா மற்றும் சகோதரர்களான யாபேஸ், யானிஸ் ஆகிய மூவரும் ராஜேஷின் வீட்டிற்குச் சென்றனர். அங்கு இருந்த ஜெபாஸ்லின் விஜியைத் தங்கள் வீட்டிற்கு வருமாறு அவர்கள் அழைத்துள்ளனர். ஆனால், அவர் வர மறுத்ததால் ஆத்திரமடைந்த மூவரும் அத்துமீறி ராஜேஷ் வீட்டிற்குள் நுழைந்தனர்.
அங்கு ஜெபாஸ்லின் விஜியை அடித்து உதைத்ததோடு, அதனைத் தட்டிக்கேட்ட ராஜேஷ் மற்றும் அவரது தந்தை கனகராஜையும் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். மேலும் அவர்களுக்குக் கொலை மிரட்டல் விடுத்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இந்தத் தாக்குதலில் காயமடைந்த ராஜேஷ், கனகராஜ் மற்றும் ஜெபாஸ்லின் விஜி ஆகிய மூவரும் சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காகத் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், தட்டார்மடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயபால் வழக்குப் பதிவு செய்துள்ளார். தலைமறைவாக உள்ள இளம்பெண்ணின் தாய் ஜெசிந்தா மற்றும் அவரது இரண்டு சகோதரர்களைப் போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர்.

