Skip to content

ஏற்காடு சொகுசு விடுதியில் இளம்பெண் படுகொலை: இன்ஸ்டாகிராம் காதலன் அதிரடி கைது

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் நேற்று இரவு சுமார் 33 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் அரை நிர்வாண நிலையில் பிணமாகக் கிடப்பதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உயிரிழந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விடுதி ஊழியர்களிடம் நடத்திய விசாரணையில், நேற்று மதியம் ஒரு மணியளவில் அந்தப் பெண்ணும் ஒரு ஆணும் அறை எடுத்து தங்கியதும், மாலை 6 மணியளவில் அந்த ஆண் மட்டும் தனியாக வெளியே சென்றதும் சிசிடிவி கேமரா மூலம் உறுதி செய்யப்பட்டது.

தொடர் விசாரணையில், கொலை செய்யப்பட்ட பெண் தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகே உள்ள ஏர்கோலபட்டி பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரின் மனைவி சாலா (33) என்பது தெரியவந்தது. இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து வாழ்ந்த சாலாவுக்கு, இன்ஸ்டாகிராம் மூலம் சேலம் இளம்பிள்ளையைச் சேர்ந்த எலக்ட்ரீஷியன் பார்த்திபன் (35) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. திருமணமான பார்த்திபனும் சாலாவும் கடந்த நான்கு ஆண்டுகளாகப் பழகி வந்துள்ளனர்.

நேற்று இருவரும் ஏற்காட்டிற்கு வந்து தங்கியிருந்தபோது, அவர்களுக்குள் பண விவகாரம் தொடர்பாகத் தகராறு ஏற்பட்டுள்ளது. “பணம் கொடுத்தால் தான் தொடர்ந்து பழக முடியும்” என்று சாலா கூறியதால் ஆத்திரமடைந்த பார்த்திபன், சாலாவைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு தப்பியோடியது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, இளம்பிள்ளையில் உள்ள தனது வீட்டில் பதுங்கியிருந்த பார்த்திபனை போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!