திருச்சி பாலக்கரை கம் ஸ்டோன் ரயில்வே ட்ராக் அருகே உள்ள பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட,உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடிய போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக பாலக்கரை போலீசாருக்கு தகவல் வந்தது.இதை எடுத்து பாலக்கரை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் குமார் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்று தீவிரமாக கண்காணித்தனர்.அப்போது சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை மடக்கிப் பிடித்தனர்.அவரிடம் சப்-இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தினர்.விசாரணையில் அவர் போதை மாத்திரைகள் விற்பது தெரிய வந்தது.அவரிடமிருந்து போதை மாத்திரைகள், சலைன் வாட்டர் பாட்டில்கள், சிரஞ்சுகள் மற்றும் நீடில்கள் ( ஊசிகள்)பறிமுதல் செய்யப்பட்டன.பின்னர் விசாரணையில் அவர் பாலக்கரை கெம்ஸ்டவுன் பகுதியைச் சேர்ந்த அப்பூனா என்கிற ஹர்ஷாத் முகமது (வயது 22 )என்பதும், அவர் தற்போது பாலக்கரை ஆட்டுக்கார தெரு பகுதியில் வசித்து வருவதும் தெரியவந்தது பின்னர் போலீசார் அவரை கைது செய்தனர்.
இதேபோல் திருச்சி காந்தி மார்க்கெட்டில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் உள்ளிட்ட போதை பொருள்கள் விற்றதாக மரக்கடை பாரதி நகரை சேர்ந்த சேகர் என்கிற வாலிபரை காந்தி மார்க்கெட் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

