கர்நாடக மாநிலம் பெங்களூருவில் மெட்ரோ ரயில் ஊதா வழித்தடத்தில் இன்று காலை வழக்கம் போல் இயக்கப்பட்டது. அலுவலகத்திற்கு செல்வபர்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்பவர்கள் உள்ளிட்ட பலர் அந்த ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தனர்.
அந்த ரயில் கெங்கேரி மெட்ரோ ரயில் நிலையத்திற்கு வந்தபோது வாலிபர் ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்த கொண்டார். இதனால் ஊதா வழித்தடத்தில் ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பின்னர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்த நபரின் உடலை அப்புறப்படுத்தினர். முதற்கட்ட விசாரணையில், தற்கொலை செய்து கொண்ட நபரின் பெயர் ஷந்தாகோட் பட்டீல் என்பது தெரியவந்துள்ளது.
தொடர்ந்து இந்த தற்கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அதே சமயம், காலை நேரத்தில் ரயில் சேவை திடீரென நிறுத்தப்பட்டதால் மெட்ரோ ரயிலை நம்பியிருந்த பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். இதனிடையே மெட்ரோ நிர்வாகத்தினர் துரிதமாக செயல்பட்டு, காலை 9.40 மணியளவில் ஊதா வழித்தடத்தில் மீண்டும் மெட்ரொ ரயில் சேவை தொடங்கப்பட்டதாக அறிவித்தனர். இதையடுத்து வழக்கம்போல் மெட்ரோ ரெயில் சேவை இயங்க தொடங்கியது.

