Skip to content

மின்சாரம் தாக்கி வாலிபர் பலி… பெண்ணிடம் நகை பறிப்பு.. திருச்சி க்ரைம்

மின்சாரம் தாக்கி வாலிபர் பலி..

திருச்சி, ஸ்ரீரங்கம் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கரன் . இவரது மகன் பிரபு (38). இவர் தனது தந்தையுடன் ஸ்ரீரங்கம் ஆர் எஸ் சாலை பகுதியில் உள்ள காவடிக்கார தெருவில் வேலைக்கு சென்றிருந்தார். இந்நிலையில் அந்த பகுதியில் உள்ள உயர் மின்னழுத்த லைனில் பிரபு எதிர்பாராதமாக கை வைத்துள்ளார். இதனை தொடர்ந்து பிரபு மீது மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்தார். ஆபத்தான நிலையில் பிரபுவை  ஸ்ரீரங்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்து பார்த்த டாக்டர் ஏற்கனவே பிரபு இறந்து விட்டதாக கூறினார். இச்சம்பவம் குறித்து ஸ்ரீரங்கம்  போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

லாரி டிரைவர் மயங்கி விழுந்து சாவு

திருச்சி அதவத்தூர் பகுதியை சேர்ந்தவர் கஸ்தூரி ரெங்கன் (67) இவர் திருச்சி பாலக்கரை குட்செட் ரோடு பகுதியில் உள்ள லாரி ஷட்டில் தனியார் மில்லில் லாரி டிரைவராக பணியாற்றி வருகிறார்.கடந்த 14 ந்தேதி மில்லில் உள்ள நாற்காலியில் கஸ்தூரி ரெங்கன் அமர்ந்திருந்தார். இந்நிலையில் திடீரென்று அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதையடுத்து சிறிது நேரத்தில் கஸ்தூரி ரெங்கன் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து பாலக்கரை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கஸ்தூரி ரெங்கன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து பாலக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

 

டூவீலர் திருடன் கைது

திருச்சியை அடுத்த சோமரசம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஹக்கீம் பாஷா (வயது 33) இவர் கடந்த மே மாதம் 28ந்தேதி மதுரை ரோட்டில் உள்ள தனியார் ஹோட்டல் அருகில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சாப்பிட சென்றார்.பிறகு மீண்டும் வந்து பார்த்த போது டூவீலர் காணவில்லை. இதுகுறித்து ஹக்கீம் பாஷா கோட்டை போலீசில் புகார் கொடுத்தார்.இதேபோன்று சோமர்சம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் நடராஜன் (வயது 46 )இவர் தபால் நிலையம் அருகில் தனது டூவீலரை நிறுத்திவிட்டு வெளியே சென்றார்.பிறகு மீண்டும் வந்து பார்த்த போது டூவீலர்  திருட்டு போனது தெரியவந்தது. இது தொடர்பாக நடராஜன் கோட்டை போலீசில் புகார் அளித்தார். இந்நிலையில் கோட்டை பகுதியில் சந்தேகத்திற்கிடமாக வாலிபர் ஒருவர் டூவீலரில் வந்தார். இவரைப் பார்த்த போலீசார் பிடித்து விசாரணை செய்தபோது திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரை சேர்ந்த ஸ்டீபன் என்பவரின் மகன் அருள் ஆனந்த் (24 )என்பது தெரிய வந்தது. மேலும் அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை செய்த போது முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறினார்.இதையடுத்து அருளானந்த்திடம் போலீசார் தொடர்ந்து விசாரணை செய்தபோது அவர் இருசக்கர வாகனத்தை திருடும் நபர் என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து ஹக்கீம் பாஷா, அருள் ஆனந்த் ஆகியோரிடம் திருடிய  டூவீலரை பறிமுதல் செய்து அருளானந்தத்தை கைது செய்துள்ளனர்.

திருச்சி மத்திய சிறை வளாகத்தில்  கிடந்த செல்போன்கள், சிம், சார்ஜர்கள் பறிமுதல்

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் சிறப்பு முகாமில் கடந்த 11ஆம் தேதி சிறப்பு முகாம் சிறையில் இருந்த 25 வங்கதேச கைதிகளை சேலம், ஆத்தூரில் உள்ள சிறப்பு முகாமிற்கு மாற்றுவதற்காக வெளியே பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வந்து வேனில் ஏற்ற தயாராகிக் கொண்டிருந்தனர். அப்பொழுது
பெரம்பலூர் இன்ஸ்பெக்டர் மார்க்ரேட் மேரி கைதிகளின் உடமைகளை சோதனை செய்தார். அப்பொழுது அங்குள்ள மரத்தின் அடியில் இரண்டு செல்போன்கள் ஐந்து சிம் கார்டுகள் இரண்டு சார்ஜர்,செல்போன் உபகரணங்கள் கிடந்தன.இதனை சிறைத்துறை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர் இந்த சம்பவம்அங்குள்ள கைதிகளிடம் விசாரணை செய்தபோது அவர்கள் எங்களுக்கு தெரியாது என்று கூறிவிட்டனர். இது குறித்து அப்போது பாதுகாப்பு பணியில் இருந்தபெரம்பலூர் இன்ஸ்பெக்டர் மார்க்கேரட் மேரி கேகே நகர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெண்ணிடம் 3 1/2 நகை பறிப்பு

ஸ்ரீரங்கத்தை சேர்ந்தவர் சுகுமார் இவரது மனைவி சித்ரா ( 43) இவர் நேற்று முன்தினம் ஸ்ரீரங்கம் வீரேஸ்வரம் மெயின் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார் அப்பொழுது அந்த வழியாக  டூவீலரில் வந்த மர்ம ஆசாமி திடீரென சித்ரா அருகில் வந்து அவர் கழுத்திலிருந்த  3 1/2 பவுன் நகையை பறித்துக் கொண்டு ஓடி விட்டார். இச்சம்பவம் குறித்து சித்ரா  ஸ்ரீரங்கம் போலீசில் புகார் செய்தார். இப்புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து நகையை திருடி சென்ற மர்ம ஆசாமியை வலை வீசி தேடி வருகின்றனர்.

error: Content is protected !!