Skip to content

திருச்சியில் வாலிபர் படுகொலை.. ஒருவரை சுட்டுபிடித்த போலீசார்..

  • by Authour

திருச்சி பீமநகரை சேர்ந்தவர் தாமரைச்செல்வன். இவர் தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். நேற்று காலை தாமரைச்செல்வனை பீமநகர் பகுதியில் இரு மோட்டார் சைக்கிளில் வந்த 5 பேர் கும்பல் திடீரென வழிமறித்து அரிவாளால் வெட்டினர்.

இதில் அவர் உயிரை காப்பாற்றிக் கொள்ள அருகே இருந்த காவலர் குடியிருப்பில் புகுந்தார்.
அங்கு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரின் வீட்டுக்குள் புகுந்த தாமரைச்செல்வனை அந்த கும்பல் சுற்றி வளைத்து சராமரியாக வெட்டி படுகொலை செய்தனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பினர். ஆனால் இளமாறன் என்ற நபரை மட்டும் பொதுமக்கள் சுற்றி வளைத்து பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து பாலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் இந்த கொலையில் லால்குடி வாளாடியை சேர்ந்த சதீஷ்(26), திருவானைக்காவல் கொண்டையம்பேட்டையை சேர்ந்த பிரபாகரன், நந்தகுமார், கணேசன் உள்பட 5 பேர் ஈடுபட்டது தெரியவந்தது. சதீஷூக்கும், தாமரைச்செல்வனுக்கும் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக தான் இந்த கொலை சம்பவம் நடந்தது தெரியவந்தது.

இதையடுத்து கொலையாளிகளை தேடி வந்தனர். இந்த நிலையில் ஸ்ரீரங்கம் கொள்ளிடக்கரை வாட்டர்டேங்க் அருகே சதீஷ் பதுங்கி இருப்பதாக ஸ்ரீரங்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல் ஆய்வாளர் திருவானந்தம் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது போலீசாரை கண்டதும், சதீஷ் அரிவாளால் போலீஸ்காரர்களான மாதவராஜ், ஜார்ஜ்வில்லியம் ஆகியோரை அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது.
உடனே காவல் ஆய்வாளர் திருவானந்தம் துப்பாக்கியால் சதீஷின் வலது முட்டியில் சுட்டார். இதில் படுகாயம் அடைந்த அவர் அதே இடத்தில் சுருண்டு விழுந்தார். உடனே காயம் அடைந்த போலீஸ்காரர்களை ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சதீஷை திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி திருச்சி ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று இரண்டு காவலர்களான ஜார்ஜ் வில்லியம்ஸ், மாதவராஜ் ஆகியோரை சந்தித்தார். மேல் சிகிச்சைக்காக இரண்டு காவலர்களை திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
இதனால் அரசு தலைமை மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

error: Content is protected !!