பொதுவாக விளையாட்டின் போது காயங்கள் ஏற்படுவது தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. கிரிக்கெட்டிலும், வீரர், வீராங்கணைகளுக்கு அவ்வப்போது காயங்கள் ஏற்படுவதை நம்மால் காண முடிகிறது. ஆனால், இலங்கையில் நடைபெறும் லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் வீரர் ஒருவருக்கு அரிய காயம் ஏற்பட்டு இருப்பது அனைவரையும் திரும்பி பார்க்கவைத்து உள்ளது. லங்கா பிரீமியர் லீக்கில் கண்டி பால்கன்ஸ் மற்றும் காலி கிளாடியேட்டர்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டி நடைபெற்றது. போட்டியின் போது, இலங்கை வீரரான சமிக கருணாரத்ன, தனக்கு வந்த உயரமான கேட்சை பிடிக்க முற்பட்டார். அப்போது பந்து எதிர்பாராதவிதமாக அவரது பற்களை பதம் பார்த்த பின்னரே அவரது கைகளில் தஞ்சமடைந்தது. பந்து அவரது பற்களை தாக்கியதில், மைதானத்திலேயே வாயில் ரத்தத்தோடு காணப்பட்ட அவர், தனது நான்கு பற்களை இழந்தார். வாயை மூடியவாறு மைதானத்தை விட்டு வெளியே சென்ற அவர், தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.