புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம், ஆயிங்குடி ஊராட்சியில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில், புதிய நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா நடந்தது. பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்து, விவசாயிகளிடமிருந்து நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யும் பணியினை துவக்கி வைத்தார்.
பின்னர் அமைச்சர் மெய்யநாதன் கூறியதாவது:
விவசாயிகளின் வாழ்க்கை தரத்தினை உயர்த்திடும் வகையில் எண்ணற்ற மக்கள் நலத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். அந்தவகையில் தமிழகம் முழுவதும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, விவசாயிகளிடமிருந்து அதிக அளவில் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி இன்றையதினம் ஆயிங்குடி ஊராட்சியில், புதிய நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறந்து வைக்கப்பட்டது.
இந்த நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூலமாக விவசாயிகள் அறுவடை செய்த நெல் மூட்டைகளை இடைதரகர்களின்றி அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூலம் காலதாமதமின்றியும், சேதமின்றியும் விற்பனை செய்வதற்கு உறுதுணையாக அமைந்துள்ளது. அதன்படி, இப்பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் அனைவரும் பயன்பெறும் வகையில் இந்த புதிய நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
எனவே, விவசாயிகள் அனைவரும் தாங்கள் அறுவடை செய்த நெல் மூட்டைகளை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தின் மூலம் விற்பனை செய்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியர் ச.சிவக்குமார், சண்முகநாதன் மற்றும் அரசு அலுவலர்கள்கலந்துகொண்டனர்.